Sunday, January 28, 2018

சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் அவமதித்த மதிமாறன். குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?

பெரியாரிஸ்டுகளுக்கே உரிய அறிவிலித்தனத்தோடும் தடித்தனத்தோடும் மதிமாறன் மீண்டும் ஒரு முறை பொய்களையும் அரை வேக்காட்டுத்தனத்தையும் அவிழ்த்துவிட்டிருக்கிறார். வேறெந்த நாட்டிலும் சுதந்திர தினத்தை இவ்வளவு மூடத்தனமாகக் கிண்டலடித்துக் கைத் தட்டு வாங்க முடியாது. குடியரசு தினம் என்றால் என்னவென்றே தெரியாதவர் அத்தினத்தைக் கொண்டாடுவதை எள்ளி நகையாடுகிறார்.

முகநூலில் நண்பர் இதைப் பகிர்ந்து "முட்டாள்கள் சூழ் உலகு" என்றார். அதில் வெறுமனே கடுமையாகச் சாடிவிட்டு நகர்ந்துவிட்டேன். ஆனால் நாள் முழுவதும் அந்தப் பேச்சுத் துன்புறுத்தியது. பற்பல கோடி இந்தியர்களின் வியர்வையிலும் இரத்தத்திலும் தோய்ந்து கிடைத்த சுதந்திரத்தை இந்த மூடன் எள்ளி நகையாடியது தக்க எதிர் வினை இல்லையென்றால் நாளை மேற்கோள் கட்டப்படும் உண்மையாகி விடும். இதை முதலில் முகநூலில் எளிய பதிவாக எழுத நினைத்தேன் ஆனால் இது முகநூல் பதிவு என்பதைத் தாண்டி பதியப்பட வேண்டும் என்பதற்காகவே இங்கு வெளியிடப் படுகிறது.மதிமாறன் பேசியது: 

1948 ஆகஸ்டு 15-இல் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லி பிறகு 47-இல் கிடைத்தது இல்லையா என்று திருத்தி, தான் பெரியார் கட்சிக்காரன் என்றும் அதனால் நினைவில் இல்லையென்றார். கூட்டத்தில் ஒன்றிரண்டு கைத்தட்டல்கள். 1950 வரை சுதந்திர தினம் மட்டும் கொண்டாடப்பட்டது பிறகு தீடீரெனக் குடியரசு தினம் என்று ஒன்று சேர்க்கப்பட்டது, இரண்டு தினத்துக்கும் என்ன வித்தியாசம் என்று வினவி 1929-இல் முன் மொழியப்பட்ட 'பூரணச் சுதந்திரம்' கோஷத்தை சுட்டிக் காட்டுகிறார். அப்போது, பூரணச் சுதந்திரம் அடைய 'வரி கொடா' போராட்டம் நிகழ்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதை நடத்தும் அதிகாரம் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டதென்றும் காந்தியோ போராட்டம் நடத்தினால் வன்முறையும் ஆங்கில அரசுக்கு சங்கடமும் நேருமே என்றும் அஞ்சி 1930-இல் சுதந்திரம் கிடைத்து விட்டது போல் பாவித்து மிட்டாய் விநியோகம் செய்து கொண்டாடச் சொல்லி ஆங்கிலேய அரசின் முன் கேலிப் பொருளானார் என்று முடிக்கிறார்.

இப்படியெல்லாம் பேசுவதற்கு ஈரோட்டில் தான் பட்டம் வாங்க வேண்டும். அப்பட்டமான பொய்கள். கொழுப்பெடுத்த தடித்தனம்.

1929-இல் காந்தி: 

1929 டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் லாகூரில் 'பூரணச் சுதந்திரம்' என்பது குறிக்கோளாக அறிவிக்கப் பட்டு 'இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கங்களோடு கொடியேற்றம் செய்யப்பட்டது. 1929-இல் காந்திக்கு 60 வயது பூர்த்தியானது. இந்த வருடத்தை அவர் எப்படிச் செலவிட்டார் என்று பார்த்தால் பிரமிப்பூட்டும்.

ஜனவரி 1-ஆம் தேதி கல்கத்தாவில் அந்நியத் துணி பகிஷ்காரம், பிறகு அகமதாபாத் திரும்பல்.பிப்ரவரியில் சிந்து மாகாணத்துக்குப் பயணம். கராச்சியில் பொதுக் கூட்டம், சிந்து மாகாணத்தில் சுற்றுப் பயணம். பிப்ரவரி 15- டில்லி வருகை காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். மார்ச் 4 கல்கத்தாவில் அந்நியத் துணி எரிப்பும் கைதும். உடனே விடுவிக்கப்படுகிறார். மார்ச் 5 பர்மாவுக்குப் பயணம். மார்ச் 24-இல் கல்கத்தாவில் பொதுக் கூட்டம். இதற்கிடையே பகத் சிங் குண்டு வெடிப்பு நிகழ்ச்சியும் பம்பாய் மற்றும் வேறு சில தொழில் மையங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் நடக்கின்றன. ஏப்ரல் 6 ஆந்திர சுற்றுப் பயணம். ஒரு கூட்டத்தில் தனக்குப் புகழ் உரைகள் அளிக்கப்படுவதை விடப் புள்ளி விவரங்கள் - ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ஆண், பெண், தீண்டத்தகாதோர், பள்ளிகள்- அளிக்கப்பட்டால் உபயோகமாக இருக்கும் என்கிறார். 319 கிராமங்களுக்குக் காந்தி சென்றார். பல்லாயிர கணக்கானோர் காந்தியின் சந்திப்புகளுக்கு வந்தனர். 6 வார சுற்றுப் பயணம் மே மாதம் 21-ஆம் தேதி முடிந்தது.

ஜூன் மாதம் அல்மோரா பயணம். ஜூலை மாதம் மீண்டும் சபர்மதி. செப்டெம்பரில் உத்திரப் பிரதேசம் சுற்றுப் பயணம். நவம்பர் 24 சுற்றுப் பயணம் முடிவுற்றது. முக்கியமான நகரங்கள், கிராமங்கள், பல்கலைக் கழகங்கள் என்று காந்தி உரையாற்றாத இடம் குறைவு.

டிசம்பரில் லாகூருக்குப் பயணம். டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவில் 'பூரணச் சுதந்திரம்' முழக்கமாக ஏற்கப்படுகிறது. பூரணச் சுதந்திரம் அடைவதற்கு ஒத்துழியாமை மற்றும் வரிக் கொடுக்காமை தேர்ந்தெடுத்த இடங்களில் தக்க பாதுகாப்புகளோடு முன்னெடுக்கப் படும் என்று முடிவு செய்யப்பட்டது. அது தான் காந்தியம். ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போது மக்களைச் சிந்தித்தவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மக்களைத் தூண்டிவிட்டு வீட்டில் படுத்து உறங்கியவர் அல்லர். மதிமாறன் சொல்வது போல் அவர்கள் ஒன்றும் வரிக் கொடுக்காமல் இருப்பது ஒன்றை மட்டும் முன் வைக்கவில்லை. அது வரை தீர்க்கமாகப் பூரணச் சுதந்திரம் மட்டுமே குறிக்கோள் என்று சொல்லப்பட்டதில்லை. அது ஒரு புதிய ஆரம்பம். ஒரு நீண்ட நெடிய சரித்திர முக்கியத்துவப் பயணத்தில் மிக முக்கியத் தருணம். இப்படித் தான் உலகெங்கும் புரட்சிகள் உருப் பெற்றிருக்கின்றன.

26 ஜனவரி 1930 முதல் தண்டி யாத்திரை வரை: 

லாகூர் தீர்மானம் மக்களிடையே என்ன வகையான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை அறிய 26 ஜனவரி 1930 'சுதந்திர தினம்' என்று அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்றும் அத்தினத்தில் நாடு முழுக்கக் காங்கிரஸ் உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது. அக்கூட்டங்களில் உறுதி மொழித் தவிர வேறு அலங்கார உரைகள் கூடாதென்றும் முடிவெடுத்தார்கள். இது ஒன்றும் மதிமாறன் சொல்வதைப் போல் மிட்டாய்க் கொடுத்து பம்மாத்துக் காட்டிய நாள் அல்ல.

நேரு தன் சுய சரிதையில் அந்நாளை நினைவுக் கூர்கிறார். "சுதந்திர தினம் வந்தது, ஜனவரி 26, 1930, அது நாட்டில் நிலவிய உற்சாக மனநிலையை எங்களுக்கு மின்னல் பொழுதில் உணர்த்தியது. அலங்கார உரைகள் இல்லாது பல இடங்களில் நிகழ்த்தப்பட்ட உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் அமைதியாகவும் சீராகவும் நடந்தது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவையெல்லாம் காந்திக்குத் தேவையான விசையைக் கொடுத்தது. அடுத்தடுத்த நிகழ்வுகள் ஒரு முக்கியக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது ஒரு டிராமாவைப் போல்".

ஒத்துழையாமை இயக்கம் எப்படி வன்முறைக்குள் சறுக்கி விழாமல் முன்னெடுக்க முடியும் என்று காந்தியும் காங்கிரஸும் மீண்டும் மீண்டும் விவாதித்தன. முன்னெடுக்கப் போகும் போராட்டத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்பதைக் காந்தி எதிர்ப்பார்த்தார். அப்படித் தான் கைது செய்யப்பட்டால் அடுத்தக் கட்டப் போராட்டங்கள் எப்படி அமைதியாக நடக்க வேண்டும், வன்முறைக்கு இடம் கொடுக்காமல் எப்படி மேற்கொண்டு போராட்டம் தொடர வேண்டும் என்று சமூகத்தின் ஆசானாக விரிவாகத் திட்டங்களைத் தன் பத்திரிக்கையில் விவரித்தார்.

வரிக் கொடாமைப் போராட்டத்தைக் காந்தி கை விட்டதாக மதிமாறன் சரடு விடுகிறார். காந்தி அடுத்தக் கட்ட போராட்டத்தை அறிவித்தார். உலகளாவிய சாம்ராஜ்ஜியத்தின் தூண்களை அசைத்துப் பார்த்து உலகின் பார்வையை ஒரு அறுபது வயது முதியவரின் நடைப் பயணத்தை நோக்கித் திருப்பியது அவர் அறிவித்தப் போராட்டம். வரலாறுக் காணாத எழுச்சி தேசமெங்கும். ஆம் அது தான் உப்புச் சத்தியாகிரகம் என்றும் தண்டி யாத்திரை என்றும் அறியப்பட்டது. அது உப்பு மீதான வரியை ரத்துச் செய்யச் சொல்லித் தான் நடத்தப்பட்டது.

12 மார்ச் 1930 சபர்மதியில் காந்தி உட்பட 80 சத்தியாகிரகளோடு தொடங்கிய யாத்திரை 24 நாட்கள் முடிவில் 6 ஏப்ரல் 1930 அன்று ஒரு கைப்பிடி உப்பை அள்ளியதோடு தண்டியில் முடிந்தது. அந்த நிகழ்வைப் பற்றிய எழுதிய அத்தனை வரலாற்றாசிரியர்களும் இன்றும் பிரம்மிப்போடு தான் அது பற்றி எழுதுகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நில வரி கொடுக்க மறுப்பது போன்ற ஏதோ ஒன்றை தான் காந்தி அறிவிப்பார் என்று நினைத்தார்கள் ஆனால் காந்தியின் உப்பு வரி எதிர்ப்பு அக்கினி குஞ்சாக ஆரம்பித்துப் புரட்சி எரி தழல் ஆனது. இப்படிப்பட்ட சரித்திர நிகழ்வைப் பற்றியும் அது ஏன் அப்படி ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது என்றும் நம் பள்ளி சரித்திர நூல்கள் சொல்லித் தர தவறிவிட்டதாலேயே மதிமாறன்கள் எளிதாக அரைவேக்காட்டுப் பொய்களை வீசிவிட்டு கைத்தட்டல் வாங்குகிறார்கள்.

உப்புச் சத்தியாகிரகம் பற்றி வாயே திறக்காமல் மழுப்பியது அயோக்கியத்தனம். அது சரி பெரியாரிஸ்ட் ஆச்சே இதையாவது செய்து தானே ஆக வேண்டும்.

காந்தி-இர்வின் ஒப்பந்தமும் பகத் சிங்கின் தூக்குத் தண்டனையும்: 

5 மே 1930 தண்டியில் கைது செய்யப்பட்ட காந்தி 25 ஜனவரி 1931 விடுதலைச் செய்யப்பட்டார். மற்ற தலைவர்களும் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டனர். காந்தியும் இர்வினும் பிப்ரவரி 17 முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை பேச்சு வார்த்தை நடத்தினர்.

காந்தி-இர்வின் பேச்சு வார்த்தை நடந்த போது பகத் சிங்கும் அவர் கூட்டாளிகளும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டனர் சாண்டர்ஸ் கொலை வழக்குக்காகவும் குண்டு எறிந்த நிகழ்வுக்காகவும். பகத் சிங் தூக்கிலப்படுவது தான் அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்து என்று பச்சைப் பொய்யை மதிமாறன் சொல்கிறார். முன்பொரு முறை தமிழச்சி தங்கப்பாண்டியன் என்பவரும் இதே போல் ஒரு அவதூறைச் சொன்னார்.

இர்வினிடம் காந்தி தன் எல்லா நம்பிக்கைகளுக்கும் எதிரான செயல் ஒன்றைச் செய்த பகத் சிங்குக்காக இர்வினிடம் மிகத் தீவிரமாகவே வாதிட்டிருக்கிறார். இர்வின் சொல்கிறார், "அமைதியின் அப்போஸ்தலரான காந்தியைப் போன்ற ஒருவர் தன் நம்பிக்கைக்கு எதிரான செயல் செய்தவர்களுக்காக வாதிடுகிறார் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எனக்குப் புரிந்தது. ஆனால் அரசியல் காரணங்கள் நீதி பரிபாலனம் பாதிக்கப்படக் கூடாது. இப்படிப்பட்ட தண்டனைக்கு இதை விடத் தகுதியான வழக்குக் கிடையாது." அமெரிக்கப் பத்திரிக்கையாளர் வில்லியம் ஷைரர் காந்தியோடு அப்போது செலவிட்ட நாட்களைப் பற்றிய நினைவோடையில் "காந்தி இர்வினிடம் அந்த மூன்று இளைஞர்களின் உயிருக்காக மன்றாடினார் ஆனால் பலனில்லை" என்கிறார்.

குடியரசு என்பது என்ன? 

தங்கள் போராட்ட்ம் ஒரு நாள் வெற்றிப் பெரும், ஒரு நாள் தங்கள் நாடும் தங்கள் மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் அது வரலாற்றின் கட்டாயம் என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள் நம்பியதோடல்லாமல் அந்த நாள் வரும் போது நாட்டை நிர்வகிப்பது பற்றி மிகப் பெரிய திட்டங்களை வகுத்து வைத்திருந்தார்கள்.

சுதந்திர இந்தியாவில் ராணுவத்தின் பங்கு என்ன, மொழி வாரி மாநிலங்கள் என்று மிகத் தீர்க்கமாக ஆய்வறிக்கைகள் தயார் செய்யப்பட்டன. ஒரு தேசத்தின் வாழ்வில் சுதந்திரத்தை விட முக்கியமானது அத்தேசம் தனக்கென உருவாக்கிக் கொள்ளும் அரசியல் சாசனம் தான்.

அமெரிக்க வரலாறைக் கொஞ்சம் நோக்கினால் அரசியல் சாசனம் என்பது சுதந்திரத்தை விட ஒரு நாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பது விளங்கும். அரசியல் சாசனம் தான் சுதந்திர தேசத்தின் அடித்தளம். சுதந்திரத்திற்குப் பின் நாடு எந்தத் திசையில் பயனிக்கும் என்பதையும் வரக் கூடிய பல்லாண்டுகளுக்கும் ஒரு பெரிய ஜனத்திரளின் பலத்தரப்பட்ட முரன்களை நெகிழ்வோடும் அதே சமயத்தில் ஒற்றுமைக் குலையாமலும் ஜனநாயக மரபுகளோடும் சமாளிக்க ஒரு வரை படத்தை உருவாக்கித் தருகிறது. இந்தியாவோடு அல்லது அதற்குப் பின் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் சறுக்கி எதேச்சாதிகாரத்துக்குப் பலியானது அவை அரசியல் சாசனத்தின் வடிவமைப்பில் கவனம் கொள்ளாதது தான் காரணம் அல்லது அரசியல் சாசனத்தைக் குழித் தோண்டி புதைக்கும் சூழல்கள் உருவானது தான் காரணம்.

அமெரிக்கா தனக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொண்டதையும், அதில் நடந்த விவாதங்களையும், அந்தச் சாசனம் மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட நடந்த முயற்சிகளும் தீவிர வரலாற்றாசிரியர்களும் அருங்காட்சியகங்களும் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. பள்ளி மாணவர்கள் பிலடெல்பியாவில் இருக்கும் அரசியல சாசனம் பற்றிய அருங்காட்சியகத்திற்குப் பல்லாயிர கணக்கில் வருகைத் தருகிறார்கள். அவர்களுக்குத் தெரியும் 'குடியரசு' என்பது என்னவென்று. இன்றும் இங்கிலாந்தி குடியரசு அல்ல. என்ன செய்வது இந்தியாவில் நம் அரசியல் சாசனம் பற்றி எழுதுவதற்குக் கூடக் கிரான்வில் ஆஸ்டின் என்கிற வெளிநாட்டினர் தான் தேவைப் படுகிறார்.

சுதந்திர இந்தியா இடைக்கால அமைச்சரவையைத் தான் அமைத்தது. இடைக் கால அமைச்சரவையின் முக்கியப் பணி அரசியல் சாசனம் உருவாக்குவது. மூன்றாண்டுக் காலப் பகீரதப் பிரயத்தனம் அது. இந்தியா மாதிரி ஒரு நாடு ஓற்றுமையான சுதந்திர நாடாகவே நீடிக்க முடியாது என்று எண்ணியவர்கள் தான் 1947-இல் அதிகம். வைக்கோல் போன்ற மனிதர்களிடம் அதிகாரம் கை மாறியிருக்கிறது என்றார் சர்ச்சில். வரலாறுக் காணாத பல கோடி மக்களின் இடப் பெயர்வு, உள் நாட்டு கலகத்துக்கு நிகரான மதக் கலவரங்கள் இவற்றுக்கிடையே அரசாங்கத்தையும் நடத்திக் கொண்டு அதன் அங்கத்தினரில் பலர் அரசியல் சாசனம் எழுதும் முக்கியக் கமிட்டிகளுக்குத் தலைவர்களாகவும் இரட்டைப் பொறுப்பு வகித்தனர். நேரு, பட்டேல், பிரசாத், அம்பேத்கர் செய்ததை அமெரிக்காவின் தேசப் பிதாக்கள் கூடச் செய்யவில்லை.

அரசியல் சட்ட வரைவின் தலைமை இந்தியாவில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அன்றைய ஆளும் கட்சியின் முக்கியஸதர்களோடு மிக உக்கிரமாகச் சண்டையிட்டவரும் ஆன அம்பேத்கர். நவம்பர் 4, 1948 அன்று அம்பேத்கர் இடைக்கால அரசு (Constituent Assembly) முன் அளித்த உரை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை விளக்கும் அற்புத உரை.

எந்த வகையான அரசியல் அமைப்பு, ஏன், அமெரிக்க அரசியல் அமைப்பிலிருந்து எங்கு மாறுபடுகிறோம், ஏன் இந்திய மரபிலிருந்து சட்டம் விலகுகிறது, சிறுப்பான்மையினரை அங்கீகரிப்பதும் அவர்களும் பெரும்பான்மையினரும் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவான உரை அது. கத்தி மேல் நடக்கும் லாவகத்தோடு எந்தப் பக்கமும் சாயாமல் ஒவ்வொரு பக்கத்தின் தரப்பையும் அங்கீகரித்து எது ஏற்கப்படுகிறது எது மறுக்கப்படுகிறது, ஏன் என்று தெளிவாகச் சொல்லும் உரை.

அந்த அரசியல் சட்டம் தான் இன்றும் இந்தியாவை உயிர்ப்பான ஜனநாயகமாக வைத்திருக்கும் ஒப்பந்தம். அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம், அதிலுள்ள இடை வெளிகள் முக்கியம், அதன் வரையறைகள் முக்கியம்.

வார்த்தைகளும் அரசியல் சட்டமும்: 

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்". மிகச் சாதாரண ஒற்றை வாக்கியம் ஆனால் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பிற்கு ஒரு விதமாக உதவிய வாக்கியம் இந்தியாவுக்கு 1947-50 நடந்த விவாதத்தில் வேறு முக்கியத்துவம் அடைந்தது.

அபிரஹாம் லிங்கன் பற்றிய திரைப்படத்தில் முக்கியமான காட்சி அடிமை முறை ஒழிப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கான வாதம். திருத்தத்தை ஆதரிப்பவர் எதிர்ப்பவர்களை நோக்கித் தூண்டில் போடும் விதமாகச் சொல்வார், "எல்லோரும் சட்டத்தின் முன் ஒன்று என்று தான் சொல்கிறோமே தவிர எல்லோரும் எல்லா விதத்திலும் ஒன்று என்று சொல்லவில்லை". 'சட்டத்தின் முன் எல்லோரும் சமம்" என்பது சமத்காரமாகச் சமரசம் உருவாக்கச் செய்த உத்தி.

ஒரு நூற்றாண்டு கழித்து இந்திய அரசியல் சட்ட விவாதத்தில் இது விவாதமாகிறது. 'சட்டத்தின் முன் எல்லோரும் சமம்' என்றால் நலிந்தோருக்காக அளிக்கப்படும் சலுகைகளை ரத்துச் செய்ய நீதி மன்றங்களுக்கு அதிகாரம் கிடைக்கும் என்று கருத்தில் கொண்டு அந்த வார்த்தைகள் சற்றே மாற்றியமைக்கப்பட்டன. இன்று வரை "எல்லோரும் சட்டத்தின் முன் சமம்" என்பதைச் சுட்டிக் காட்டி சமூக நீதிக்காக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வழக்குகள் இப்படித்தான் தோற்கடிக்கப்படுகின்றன.

தமிழ் நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கான பாதுகாப்பு ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டத்துக்கு இயற்றப்பட்டப் பாதுகாப்பு ஷரத்தில் இருந்து தான் கிடைக்கிறது. ஜமீந்தாரி ஒழிப்பு என்பது வேறு நாடுகளில் மிகுந்த ரத்தம் சிந்தி தான் நடந்திருக்கிறது. நீதிமன்றங்கள் தனியார் சொத்துரிமையை அரசாங்கம் பறிக்கிறதோ என்று தடைச் செய்யக் கூடும் என்பதற்காக நீதிமன்றப் பார்வைக்கு உட்படாதது என்று ஒரு ஷரத்தை உருவாக்கி அதில் ஜமீந்தாரி ஒழிப்புச் சட்டம் சேர்க்கப்பட்டது. இந்தக் குடையின் கீழ் தான் தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு அடைக்கலம் பெற்றிருக்கிறது.

காலனி அரசின் கீழ் கிடைக்காத சுதந்திரம் கிறித்தவர்களுக்கு இந்திய அரசியல் சாசனம் கொடுத்தது. (இது வேறு விவாதம். ஆனால் உண்மை கிட்டத்தட்ட அது தான்).

இந்து மதச் சீரமைப்பு மசோதாக்கள் நேரு என்கிற பாராளுமன்றவாதியை நமக்கு அறிமுகம் செய்கிறது. லிண்டன் ஜான்சனின் எல்லோருக்குமான ஓட்டுரிமை மசோதா வெற்றியை விட மகத்தானது நேருவின் வெற்றி. அம்பேத்கர் கசப்புற்று வெளியேறியப் பின் நேரு மிகச் சாமர்த்தியமாகக் கையாண்டு வெற்றிக் கண்டார்.

ஜனநாயக மரபுகள்: 

1920-இல் தான் அமெரிக்காவில் பெண்களுக்கான ஓட்டுரிமை. அதிலிருந்து 45 வருடம் கழித்துத் தான் எல்லா இனத்தவருக்குமான ஓட்டுரிமை கிடைத்தது அமெரிக்காவில். இந்தியாவில் 1951 தேர்தலில் வயது வரம்பை பூர்த்திச் செய்த எல்லோரும் ஓட்டுப் போட்டனர். நேருவின் முதல் அமைச்சரவையில் தாழ்த்தப் பட்ட இனத்தவர், இந்துத்துவர், காங்கிரஸ் காரர், பெண்கள் இடம் பெற்றனர்.

ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை விரிவாக்கம் செய்ய முற்பட்ட போது அதைச் சாதுர்யமாகச் சந்தித்ததோடு பின் வரும் பிரதமர்களும் அதிபர்களும் தெளிவாகத் தங்கள் எல்லைகளை அறிந்து கொள்ளும் வகையில் சட்ட வல்லுநர்களின் கருத்துகளை நேரு சேகரித்து அச்சவாகை முறியடித்தார். ஆனால் அதே நேரு அதிபருக்கான எந்த உரிமையிலும் தலையிட்டத்தில்லை என்பதோடு அவ்வுரிமைகளை மீண்டும் மீண்டும் மற்றவர்களுக்கும் நினைவூட்டினார். தான் தடுத்தும் ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்த ஷ்யாம பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் நேரு ராஜினாமாவை ஏற்கும் அதிகாரம் அதிபருக்குத் தான் என்றும் அதற்கான பரிந்துரை மட்டுமே தான் கொடுக்க இயலும் என்றும் சொல்கிறார். நேருவும்-பிரசாத்தும் வாரமொரு முறை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டனர். குழந்தைப் பருவத்தில் இருந்த நாட்டில் இவை மிக முக்கிய முன்னெடுப்புகள்.

அரசியல் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட நாள் 26 ஜனவரி 1950. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்நாளில் இந்த அங்கீகாரம் நடந்து அதைக் கொண்டாடுவது ஒரு நாட்டின் மிக முக்கியமான கொண்டாட்டம். மற்ற எல்லாக் கொண்டாட்டங்களும் ஏதோ ஒரு தரப்பு அவர்கள் நம்பிக்கைச் சார்ந்து நடத்துவது. இந்தியர்கள் எல்லோரும் இந்தியர்களாக மட்டுமே இணையும் நாட்கள் ஆகஸ்டு 15 மற்றும் ஜனவரி 26. இந்த இரு நாட்களிலும் இந்தியர்கள் கொஞ்சமாவது தங்கள் வரலாறை அறிய முற்பட வேண்டும்.

பிலடெல்பியாவில் இருக்கும் அருங்காட்சியகம் போல் இந்தியாவில் நான்கு இடத்திலாவது அருங்காட்சியகங்கள் நிறுவப் பட வேண்டும். கிரான்வில் ஆஸ்டினின் நூல் எளிமையான மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். பள்ளிக் கல்வியில் இவை முறையாகச் சொல்லிக் கொடுக்கப் பட வேண்டும். இதையெல்லாம் மிக அவசரத்தோடு செய்ய வேண்டும்.

விமர்சனங்களும் தடித்தனங்களும்: 

இந்திய அரசியல் சட்டத்தை விமர்சிக்கலாமா என்றால், தாராளமாக விமர்சிக்கலாம் என்பதே பதில். அம்பேத்கரே விமர்சித்திருக்கிறார். ஆனால் எதையும் விமர்சிப்பதற்கு முன் அதைப் பற்றிக் கொஞ்சமாவது படித்தறிய வேண்டும். வெறும் தடித்தனத்தோடு நாலு கைத்தட்டல் வாங்குவதற்காக வாய்க்கு வந்ததைப் பேசுவது காலித் தனம்.

மதிமாறன் காந்தி, நேரு அம்பேத்கர் ஆகியோரை அவமதித்தார் என்பதை விட என்னைத் துன்புறுத்தியது அவர் பேச்சு வ.உ.சி, சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், முத்துலட்சுமி ரெட்டி, அகியோரையும் சுதந்திரத்திற்காகத் தங்களையும் தங்கள் உடைமைகளையும் இழந்த என்னற்ற சாதாரண இந்தியர்களையும் தான் அவமதித்து இருக்கிறார். தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் போராடி இறந்த இளம் பெண், காந்தியால் ஆராதிக்கப்பட்டவர். சுதந்திர உணர்வும் அதை அடைய உலகெங்கும் நடந்த போராட்டங்களும் அதில் தியாகம் அத்தனை மேலோர்களும் வணங்கப் பட வேண்டியவர்கள் அவர்கள் நமக்களித்த கொடை சுதந்திரம்.

சுதந்திரம் அடைவதோ, அரசியல் சட்டம் எழுதிக் கொள்வதோ மட்டுமே போதுமானது அல்ல. நாடு என்பது உறைந்த பொருள் அல்ல. வரலாறும் எதிர் காலமும் ஒரு பயணமே. அந்தப் பயணத்தில் சுதந்திரம் அடைவதும், சட்டம் இயற்றுவதும் முக்கியத் தருணங்கள் அவ்வளவே. ஒவ்வொரு சந்ததியினரும் முயன்றால் தான் முன்னேற்றம் நிகழும் என்பதோடு அது வரை நடந்த முன்னேற்றங்களைப் பாதுகாக்கவும் முடியும்.

திராவிட இயக்கத்தின் இந்தக் கழிசடைத் தனங்களை தேசியத்தின் மீதும் பன்மைத்தன்மை மீதும் மாறா பற்றுக் கொண்டவர்கள் தான் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் படைத் திரட்டக் கூடாது. இந்துத்துவத்தின் கேடயத்தின் பின் ஒளிந்து கொண்டு மதிமாறனை வீழ்த்தக் கூடாது என்பதும் முக்கியம்.


References:

1. Mahatma (Volume 2 & 3) - D.G. Tendulkar
2. Patel: A life - Rajmohan Gandhi
3. Autobiography - Jawaharlal Nehru
4. The Indian Constitution: Cornerstone of a Nation - Granville Austin
5. Working a Democratic Constitution - Granville Austin
6. Mathimaran speech https://www.facebook.com/karthik.ashok.100/videos/1673447949343243/

9 comments:

வன்பாக்கம் விஜயராகவன் said...

திராவிட இயக்கமும், திராவிட இயக்கத்தலைவர்களான ஈ.வெ.ரா , அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களும் உலகு காணாத வகையில் நாட்டு அடிமை சாசனத்தை பிரசாரம் செய்து வந்தனர் . ஈ.வெ.ரா. தமிழர்கள் எதிர்காலம் மீது இம்மியும் நம்பிக்கை வைக்காதவர், தமிழர்கள் திறமை மற்றும் ஆற்றல் மீது காறித்துப்பியவர். இந்த ஈ.வெ.ரா. அடிமைத்தனைத்தை ஏற்றுக்கொண்டால், உடனே `சுய மரியாதை` வந்து விடுமாம் !! Glorification of a political pervert like EVR will only damage Tamil self-respect and confidence for a long time

Vasu said...

அருங்காட்சியகம்.... மிக முக்கியமான சவால்.... இதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே ஆக வேண்டும்.

பொன்.முத்துக்குமார் said...

இந்த கடைந்தெடுத்த தத்திப்புண்ணாக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லும் முகமாக ஒரு பதிவை எழுதியதை கண்டிக்க நினைத்தாலும் அதற்கான காரணமும் கட்டுரையின் உள்ளடக்கமும் பாராட்டச்சொல்கிறது. எனவே பாராட்டிவிடுகிறேன் :)

வழிப்போக்கன் said...

He is a bundle of garbage fit for feeding for pigs. You should not worry about him.

A.SESHAGIRI said...

மதிப்பிற்குரிய கன்னையன் அவர்களுக்கு,
உங்கள் தளத்தில் படித்த மிகச் சிறந்த கட்டுரை!.நமது இந்த குடியரசு தினத்திற்கு பெருமை சேர்த்துவிட்ட்டீர்கள்!.பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,நீங்கள் போன்றவர்கள் இருப்பதால்தான் மஹாத்மாவைப்பற்றியோ பண்டித நேரு,அம்பேத்கார் போன்ற அப்பழுக்கற்ற தேசத்தலைவர்களைப் பற்றியோ மிகத்தெளிவாக அறிந்து பெருமிதம்கொள்ளமுடிகிறது!.
இல்லையென்றால் இந்த கழிசடைகள் தங்களின் மாய்மால- வக்கிர பேச்சுக்களால் இந்த தேசத்தை நாசம் செய்துவிடுவார்கள் (ஏற்கனவே இந்த போலி கும்பலின் பேச்சில் மயங்கி தமிழ்நாட்டில் ஒருதலைமுறையே சீரழிந்து விட்டது)

sound said...

தக்க எதிர் வினை இல்லையென்றால் நாளை மேற்கோள் கட்டப்படும் உண்மையாகி விடும்.
You please write more suitable replies , articles based on facts to answer these liers at least for the sake of our youngsters . Otherwise your fear of these elements will come true.
Thank you.

chander said...

மிக விரிவான வரலாற்று உண்மைகள் நிறைந்த விளக்கப் பதிவிற்கு நன்றி. இரண்டு கருத்துகள் மிகவும் கவர்ந்தன. ஒன்று, இந்தியர்களின் வியர்வையிலும் இரத்தத்திலும் தோய்ந்து கிடைத்த சுதந்திரத்தை இந்த மூடன் எள்ளி நகையாடியது தக்க எதிர் வினை இல்லையென்றால் நாளை மேற்கோள் கட்டப்படும் உண்மையாகி விடும். இரண்டு, பள்ளிகளில் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களிலாவது அதன் முக்கியத்துவத்தை இன்றைய இளைய சமுதாயம் விரிவாக அறியச் செய்யவேண்டும். ஆம் அவரசமாக... இல்லையேல், நுனிப்புல் மேய்ந்து தான் தோன்றித்தனமான பரப்பப்படும் கீழ்மை வரலாற்றுக்குக் கைதட்டும் கும்பலில்தான் சேர்வார்கள்.

MV SEETARAMAN said...

you have given a fitting reply why we should uphold our REPUBLIC . unless we in tamilnadu state , make an effort to create the district level museums and take children , we may miss out

Anonymous said...

He is someone with inflated head and ideas to go with that. I wonder even if he reads your post he can realise his fault and acknowledge it. The comments in his blog shows his level of "tolerance" to allow to be posted , someone who spews venom on India,Indians and Hindus. For long I have wondered if he himself is posting those comments with someone else's name.