Wednesday, April 8, 2020

ஜெயகாந்தன் (1934-2015): எழுத்தும் அரசியலும்

பொது வாழ்வில் ஈடுபட்ட மனிதன் இறந்தாலும் விமர்சனத்திற்குட்பட்டவனே என்று நமக்கு சொல்லிக் கொடுத்தது ஜெயகாந்தன். ஒருவர் மரணமெய்திவிட்டால்அவர் எழுதிய குப்பைகளெல்லாம் குறுக்கத்திப் பூக்களாகிவிடுமாஎன்று இரங்கல் கூட்டத்தில் கேட்டாலும் தவறில்லை என்று அறிவுறுத்தியவர் ஜெயகாந்தன். தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா மற்றும் வரலாற்றில் ஜெயகாந்தனின் இடம் என்ன என்பதை அவர் வழியிலேயே பாரபட்சமில்லாமல் பார்க்கலாமே.



பாரீஸுக்குப் போ


ஜெயகாந்தனின் படைப்புலகுக்குள் நான் நுழைந்த நுழைவாயில்பாரீஸுக்கு போ’. படைப்பாளியாக அவரின் பலம் மற்றும் பலவீனம் தெளிவாகத் தெரியும் படைப்பு அது. வெகுஜனப் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்ததால் அதற்கே உரித்தான திடுக் திருப்பங்கள், நேரிடையானப் பாத்திரப் படைப்பு, எளிமையான கதைச் சொல்லல், கொஞ்சம் அங்குமிங்குமாக அலைந்தக் கதை, கடைசியாக ஒரு கிளைமாக்ஸ் ஆனால் செறிவான தத்துவ விசாரணைகள் ஊடும் பாவுமாய் அந்தக் கதைக்கு ஒரு ஜெயகாந்தன் முத்திரையைக் கொடுத்தொருக்கும்.

மோக முள்ளில் ‘integral’ என்று சொல்ல முடியாத இசை பாரீஸுக்கு போவில் பிரிக்கமுடியாமல் கதையோடு பின்னிப் பினைந்து ஊடாடுயிருக்கும். பாபு ஒரு சிறந்த மேஸ்திரியாகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு முயல்பவனாகவோ வைத்துக் கொண்டாலும் அந்தக் கதையைச் சிதையாமல் சொல்ல முடியும். பாரீஸுக்கு போ அப்படியல்ல. கர்நாடக சங்கீதத்தில் மட்டுமே ஊறித்திளைக்கும் தந்தைக்கும் பாரீஸில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக்கழித்துவிட்ட கர்நாடக சங்கீதத்திலும் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் தேர்ச்சிப் பெற்ற மகனும் மோதும் பண்பாட்டு தளமாக இசையே இருக்கும். ஜெயகாந்தனுக்கு மேற்கத்திய செவ்வியல் இசையிலும் நல்ல அறிமுகமுண்டு அது இக்கதையில் துல்லியமாகத் துலங்கும்.

இசையைப் பற்றிப் பேசுவதென்பது பல தளங்களில் நிகழக் கூடிய ஒன்று. தி.ஜா இசையை பற்றிப் பேசும் முறை ஒரு ஆரம்ப நிலையே. ராகங்களைக் குறிப்பது, ஒரு ஆலாபனையை சிலாகிப்பது, ஸ்ருதி மீட்டலில் திளைப்பதெல்லாம் ஒரு ஆரம்ப நிலை ரசிகனுக்கே உரியது. கர்நாடக சங்கீத விற்பண்ணர்கள் பலரும், ஜாம்பவான்கள் உட்பட, ரசிகர்களும் அந்த நிலையில் தான் இன்று வரை இருக்கிறார்கள். இசையென்பது ஒரு கலை அதற்கு மற்றக் கலைகளின் கூறுகள் உள்ளன, சமகால அரசியலைப் பேசுவது உட்பட, என்பதை மேற்கத்திய செவ்வியல் இசையை நன்கறிந்தவர்கள் புரிந்துக் கொள்வார்கள். அத்தகையப் புரிதலை ஜெயகாந்தன் சாரங்கனின் வாயிலாக சொல்லியிருப்பார். அதனாலேயே அந்த நாவல் இன்று வரை சர்ச்சைக்குள்ளானது, கர்நாடக சங்கீத பிரியர்களுக்கு அந்நாவல் மற்றும் அது இசைக்குறித்து வைக்கும் விவாதங்கள் எட்டிக்காயாக கசந்ததால் அந்நாவலை ஏற்க மறுத்ததோடல்லாமல் அதன் தத்துவ விவாதங்களையே அதன் குறைகளாகக் கூறுகிறார்கள். இவர்கள் தாமஸ் மானின் ‘Faust’ படித்தால் என்ன சொல்லுவார்களோ?

தவறிழைப்பதும் மன்னிப்பதும் அவர் கதைகளின் மற்றொரு முக்கியமான கூறு. கதையில் முக்கியமானத் தருணத்தில் மன்னிப்பு என்கிற கோட்பாட்டை வலியுறுத்துவார். ஏதோ ஒரு கனத்தில் தன் வசமிழந்துவிடும் மனைவியைக் கணவன் என்ன செய்வது என்றக் கேள்விக்கு ‘வெறுக்கவே முடியாத அளவுக்கு அன்பு செய்துவிட்ட ஒருவனால் வேறென்ன செய்ய முடியும்’ அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வதைவிட' என்று தன் கதாபாத்திரனூடாகப் பதில் சொன்னார்அந்தத் தவறு மீண்டும் மீண்டும் நடந்தால் என்னச் செய்வது என்கிற குதர்க்கமானக் கேள்விக்கு, “அம்மா நான் தவறிழிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லவில்லை” என்றார்

தவறுகள் குற்றங்களல்ல’ கதையின் கருவும் மன்னிப்பே. பிராமண கதாபாத்திரங்களையேக் கொண்டு பெரும்பாலும் கதைச் சொல்லும் ஜெயகாந்தன் இக்கதைக்கு கிறிஸ்தவ பெண்ணை பயன்படுத்தியிருப்பார். அக்கதையில் அத்துமீறி அப்பெண்ணிடம் நடந்துக் கொள்ளும் ஒரு மேலாளர் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கோர அப்பெண்ணின் கிறிஸ்தவப் பின்னனியை வைத்து தன் செய்கைக்கு வருத்தம் தெரிவிப்பார். 

அன்பு, ஆக்கிரமிப்பு, அந்தரங்கம்


ஜெயகாந்தனின் கருத்தியலை சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் அது தனி மனித (Individual) சுதந்திரத்தை விதந்தோதுவது தான். அன்பு செலுத்துவது என்கிற பெயரில் நிகழும் ஓர் அற்பத்தனத்தை ஓரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலின் முன்னுரையில்  ஆக்கிரமிப்பு என்பது ஸ்தூல அளவிலானதே என்று புரிந்துக் கொள்வது ஒரு ஆரம்ப அறிவே ஆகும் என்று விளக்கினார்.

சமூகத்தில் ஒருவர் இன்னொருவர் மீது அன்பு செலுத்துவதே, குறிப்பாக  பெற்றோர் மற்றும் காதலர்கள், “உன்னை நான் எவ்வளவு நேசித்தேன் நீ நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், அப்படி கீழ் படிவது தான் நீ எனக்கு செலுத்தும் நன்றிக் கடன்என்பது அருவருக்கத்தக்க ஆக்கிரமிப்பே.

‘Individual’ என்கிற வார்த்தையைதனி மனிதஎன்று கூறுவதே ஒரு குறைபாடான மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். ‘Individual’ என்பதற்கு சரியான ஒரு வார்த்தைக் கூட நம் மொழியிலோ பன்பாட்டு தளத்தில் இல்லை. ஆனால் ‘Individual’ என்பது ஐரோப்பாவில் கருத்தியலாக காலூன்றி குறைந்தது இருநூற்றாண்டுகளாகிறது. "பாரீசுக்கு போ" சாரங்கனின் தந்தை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ரங்கா, மோக முள் ரங்கண்ணா மற்றும் பாபுவின் தந்தை எனப் பலரும் மீண்டும் மீண்டும் அன்பென்ற பெயரில் ஆக்கிரமிப்பே செய்கின்றார்கள். கல்யாணியும் சாரங்கனும் அதை நிராகரித்து தங்களை ஒரு ‘independent individual’ என்பதை நிறுவுவதற்கே வியர்த்தப்படுகிறார்கள். ‘சமூகம் என்பது நாலு பேர்கதையும், அவரே முன்னுரையில் கூறியதை போன்று, ஒரு மனிதனின் வாழ்வில் சமூகம் சார்ந்த விழுமியங்களின் ஆக்கிரமிப்பே

இந்தியப் பன்பாட்டு தளத்தில் இன்றும் வேரூன்றாத இன்னொரு கருத்தியல் ‘privacy’. அதற்கும்அந்தரங்கம்என்பது ஒருக் குறைபாடான மொழிபெயர்ப்பே. இன்னொருவரின் அந்தரங்கம் நாம் அனுமதியின்றி நுழையக் கூடாத ஓரிடமென்பதே அவர்அந்தரங்கங்கள்  புனிதமானவைஎழுதியக் காலக் கட்டத்தில் ஒரு நற்பண்பு என்ற புரிதலே இல்லாதக் காலக் கட்டம்.  

பெண் பாத்திரப் படைப்பும் ஜெயகாந்தனும்


பல ஆண் எழுத்தாளர்களைப் போன்றே ஜெயகாந்தனுக்கும் பெண் கதாபாத்திரங்கள் கைக்கூடுவதில்லைதன் மேல் முறை தவறிய மோகம் கொண்ட மாமா ‘you can only be a concubine’ என்று அடிக்கடிக் கூறுவதையே வேத வாக்காகக் கொண்டு ஒரு மாலை வேளையில் தன்னை ஆட்கொண்ட படிப்போ பண்போ இல்லாத ஒரு சாதாரணனை தேடிப் பிடித்துக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் கங்காபடித்த, வேலைப் பார்த்து சம்பாரித்த சுயமாக வாழ்க்கை நடத்தும் கங்கா




"பாரீஸுக்குப் போ" லலிதா முற்போக்கெல்லாம் பேசி விட்டு தனக்கு வாழ்க்கைக் கொடுத்தஇசையென்றாலென்னபுத்தகங்களென்றால் என்னவென்றே தெரியாத மஹாலிங்கத்தின் தோளில் சாய்ந்து ஷைக்காவ்ஸ்கியின் நான்காவது ஸிம்பொனியில் லயித்துவிடுகிறாள். 

பலஹீனமான நேரத்தில் தன்னை இழந்த மனைவியை, அவள் பால் பேரன்பு கொண்ட கணவன்,  மன்னிப்பதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும் என்று கூறினாலும் அங்கே தவறிழைத்து விட்டு மன்னிப்புக் கேட்டு நிற்பது ஆண் தான். ‘தவறுகள் குற்றங்களல்ல’ என்று முறை தவறிய ஆண் தான் மீண்டும் மன்னிப்புக் கோருகிறான்பெண் மன்னிக்க வேண்டிய பாக்கியவாதியாக இருக்கிறாள். ‘அந்தரங்கங்கள் புனிதமானவை’ கதையிலும் புனித்தத்தைக் காக்க வேண்டியக் கடன் பெண்ணுக்கே.

ஜெயகாந்தனின் முன்னுரைகள்


பெர்னார்ட் ஷாவின் முன்னுரைகளைப் போல் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பிரசித்தியானவைதன்னுடைய முன்னுரைகள் அதிகப் பிரசங்கித்தனங்கள் அல்லஅவை வாசகனோடு உரையாடுவதற்கு தனக்கொரு வாய்ப்பு என்றொரு முன்னுரையில் கூறியிருப்பார்ஷாவின் முன்னுரைகள் எப்படி ஒரு பிரசார தொனியைக் கொடுத்து இலக்கியத் தன்மையை சிதைக்குமோ அப்படியே அது ஜெயகாந்தனின் முன்னுரைக்கும் பொருந்தும்

நேரிடயான பாத்திரப் படைப்புகள் இருக்கும் கதைகளுக்கு முன்னுரை என்ற ஒன்றின் மூலம் தன் மனதில் எழுந்த எந்த தத்துவ முடிச்சு அந்தக் கதையை எழுதத் தூண்டியதென்பது முதல் தன் நிலைப்பாடு என்னவென்பதையும் சொல்லிவிட்டால் அப்புறம் வாசகன் தனக்குள்ளாக எதை, தன் வசிப்பனுபவம் மற்றும் வாழ்வியல் பின்புலம் கொண்டு, மீளுருவாக்கம் செய்ய தலைப்படுவான்?

ஒருநாள் காலை பத்திரிக்கையில் கண்ட ஒரு பத்து வயதுப் பயனின் சந்நியாசக் கோலம் நமது ஹிந்து சமயவாதிகளின் ஹிருதயமற்ற, உணர்ச்சியற்ற, ஆண்மையற்ற, குறூரச் செயலின் கொடுமை பொறுக்காது என்னை உள்ளூரக் குமுறி அழ வைத்தது. அதன் விளைவுகழுத்தில் விழுந்த மாலை’". இந்த முன்னுரைக்குப் பிறகு வாசகன் எதற்கு அந்தக் கதையைப் படிக்க வேண்டும்? வேடிக்கையென்னவெனில் இந்தக் கதைக்காக அவரை தூஷித்தவர்களும் கொண்டாடியர்வகளும் அவர்ஜய ஜய சங்கரஎழுதிய போது அப்படியே இடம் மாறினார்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் லட்சுமியின் நடிப்பினால் உந்தப் பட்டு ‘கங்கை எங்கே போகிறாள்என்றார் ஜெயகாந்தன். நாவலுக்குள் நுழையும் முன்பே வாசகனுக்கு கங்காவின் கதி என்னாகும் என்பது தெளிவாகிவிடும். அந்நாவலின் முன்னுரையிலேயே எப்படி அந்தப் பாத்திரம் தன் பாட்டுக்கு பயணித்து ஒரு சோக முடிவில் தன்னைச் செலுத்திக் கொண்டது எனக் கூறி சரயு நதியில் ஜல சமாதியாகும் ராமனை ஒப்புமைக் கூறியிருப்பார். 'பாரீஸுக்கு போ' லட்சியவாதத்தை முன் வைத்தது என்றால் ‘கங்கை எங்கேப் போகிறாள்’ லட்சியமற்றப் பயணம் என்பது முன்னுரையிலேயே வாசகனுக்குத் தெளிவாக கட்டமைக்கப்பட்டிருக்கும். 

பிராமண கதாபாத்திரங்கள்


ஜெயகாந்தன் அதிகம் தன் கதைகளை பிராமணக் கதா பாத்திரங்களைக்கொண்டே அமைத்துக் கொண்டார். அதற்கு மிகப் பெரியக் காரணம் அந்த சமூகத்தின் முரன்பாடுகள். ஒரு புரம் சநாதன வைதீக பிற்போக்காளர்களும் மறுபுறம் சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டுமென்ற சீர்திருத்தவாதிகளும் தோன்றியது அந்த சமூகத்தில் தான். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பிராமணர்களே. இன்னொன்று, அந்த சமூகத்தின் சகிப்புதன்மை. ரிஷிமூலம் கதையை வேறெந்த சமூகத்தை வைத்து எழுதியிருந்தாலும் ஜெயகாந்தனின் உயிருக்கு உத்தரவாதமிருந்திருக்காது. ஆனால் அதற்காக தேவையேயில்லாத இடங்களிலும் கூட அவர் தன்னிச்சையாக பிராமண வீடுகளையே கதையின் பின்னனியாக வைத்ததும் நடந்தது.

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்


சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைந்து தனக்கும் தன் கலைக்கும் கிஞ்சித்தும் கவுரவம் குறையாமல் மீண்ட கலைஞன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்கக் கூடும். அவருடையஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்ஒரு ரசமான வாசிப்பனுபவம். சுய எள்ளல், சுய மதிப்பீடுகள், கலை என்பது என்ன, சினிமாவின் வர்த்தக சமரசங்கள் பற்றியெல்லாம் தெளிவான அபிப்பிராயங்கள் கொண்டவர் ஜெயகாந்தன். சந்திரபாபு, கண்ணதாசன் போன்றவர்கள்  உற்ற நண்பர்களாக இருந்த போதிலும் அவர்களின் உயரிய பண்புகளும் கீழ்மைகளையும் அவர் நன்கே அறிந்திருந்தார்

'திரையிசைப் பாடலாசிரியனை கவிஞன் என்று கூறலாகாதுநண்பனே என்றாலும் கண்ணதாசன் கவிஞர் இல்லை’ என்று சினிமா மோகத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்த சமூகத்தை சாடினார்.

பீம் சிங்கோடு அவர் உருவாக்கிய இரு திரைப்படங்களும், பின் அவரே இயக்கிய சினிமாவும், அவற்றின் குறைகளைத்தாண்டி, தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்றால் மிகையாகாது. சினிமாவிலும் ஜெயகாந்தன் ஜெயிக்கவே செய்தார். வெற்றியோத் தோல்வியோ அதுப் பற்றிக் கவலைப்படாமல் தன் கலைப் பார்வையை சமரசமில்லாமல் காப்பாற்றிக் கொண்ட நிம்மதி அவருக்குண்டு.

எழுத்தாளான் என்கிற பிம்பமும் ஜெயகாந்தனும்

எழுத்தாளர்களுக்கென்று இருக்கும் பிம்பத்திற்குள் தன்னை என்றும் சிறை வைத்துக்கொண்டதில்லை ஜெயகாந்தன்அதனாலேயே ஜெயகாந்தனுக்கென்று ஒரு பிம்பம் உருவானது

ஜெயகாந்தன் இறந்துவிட்டார் என்றவுடன் இணையம் மற்றும் ஊடகங்களில் குறிப்புகள் குவிய தொடங்கிய போது இரண்டு வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன, அவைசிங்கம்’, ‘ஆளுமை’. ஓரு இலக்கியவாதியை சிங்கமென்றும் ஆளுமையென்றும் விளிப்பது அரிது மட்டுமல்ல ஒரு வகையில் அச்சொற்கள் அவரின் இலக்கிய தரத்தை குறைத்து மதிப்பிடுபவர்களின் வாய்க்கு அவலானது. வயிற்றெரிச்சலில் ஒரு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இருந்தது பிம்பம் என்றும் அது ஊடகங்கள் கட்டமைத்தது என்றும் சொன்னார். ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியபோது ஊடகம் என்று இன்று நாம் விளிக்கும் எதுவும் கிடையாது. வெகு ஜனப் பத்திரிக்கைகள் தவிர அன்று இருந்தது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இயங்கிய ஒரு திராபைத் தொலைக் காட்சி தான். அப்புறம் எப்படி இந்தசிங்கம்’, ‘ஆளுமைஎன்பதெல்லாம், குறிப்பாக, ஏன் அந்த பிம்பம் உருவானது?

தமிழ் பல்கலைக் கழகத்தின் ராஜராஜன் விருதைப் பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் தன் ஏற்புரையில், "நான் தமிழில் எழுதியதால் என்னை நான்கு கோடிப் பேருக்கு தான் தெரியும்இதையே ஹிந்தியில் எழுதியிருந்தால் என்னை நாற்பது கோடிப் பேருக்குத் தெரிந்திருக்கும்ஆகவே தமிழர்களே ஹிந்திப் படியுங்கள்" என்றார். அவர் அப்படிப் பேசும் போது மேடையில் பல்கலைக் கழக துணை வேந்தரும் அன்றைய ஆட்சியில் இரண்டாமவராக இருந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் அமர்ந்திருந்தார்கள்.  அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவன் நான். 

அதிகார பீடத்தை நோக்கி உண்மயை பேசுதல் என்று மார்ட்டின் லூதர் கிங்கின் ஒரு சொற்றொடர் ஒன்றுண்டு (‘speaking truth to power’). உண்மயைப் பேசுவதென்பதே அருகிவிட்ட ஒரு சமூகத்தில் அதிகார பீடத்தை நோக்கி உண்மயை பேசுதல் என்பது கான்பதற்கரிய காட்சியாகிவிட்டதையே ஜெயகாந்தனுக்குக் கிடைத்தசிங்கம்எனும் பாராட்டுரை சொல்லுகிறது.

சினிமா கவர்ச்சியைக்கொண்டே ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரை மையமாக வைத்து ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ எழுதினார்அதை அன்று எழுதி வெளியிடுவதற்கு அவருக்கே தைரியமிருந்ததுஇன்றும் சினிமா மோகத்தில் தன் ஆன்மாவைத் தொலைத்துவிட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அந்தக் கதைமிகை நடிப்புக்குப் பெயர்போன மற்றொரு நடிகரை அவரை மேடையில் வைத்துக் கொண்டே சாடினார் ஜெயகாந்தன்அந்நடிகரின் ‘பிள்ளைகள்’ போன்ற ரசிகர்கள் முஷ்டியையுயர்த்த அவர் பதிலுக்கு ‘வாங்கடா’ என்றாராம்

இதுபோன்ற கதைகள் பல இப்போது வலம் வந்து கொண்டிருகின்றனஅவற்றுள் பல apocryphal என்று சொல்லத்தக்கவைஆனால் அவற்றை அவர் செய்திருப்பார் என்று நம்பும்படியான வாழ்க்கையை அவர் வாழ்ந்ததாலேயே அந்தக் கதைகளுக்கு ‘aprocryphal’ என்று சொல்லத்தக்க நம்பகத்தன்மை இருந்தது.

அந்த இரங்கல் உரையும் ஜெயகாந்தனின் அரசியலும்

நானறிந்த எந்த எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு திறமை ஜெயகாந்தனுக்குண்டுஅவர் சிறந்த பேச்சாளர். ‘கேட்பினும் கேளாத் தகையவே வேட்ப மொழிவதாம் சொல்’ எனும் குறளுக்கு ஜெயகாந்தனைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம்அனல் கக்கும் அவரின் பேச்சுகள் வெறும் உணர்வெழுச்சிகளல்லமிக மிகக் கோர்வையாக மையக் கருத்தை நிருவிஅதற்கு தர்க்க ரீதியாக வலு சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு மேடைப் பேச்சிற்கான அனைத்து உயரிய பன்புகளையும் தன்னகத்தே கொண்டவையே ஜெயகாந்தனின் பேச்சுகள்.

ஜெயகாந்தன் பேசியதிலும் எழுதியதிலும் மிக அதிகமாக சர்ச்சைக்குட்பட்டது அவர் கண்ணதாசன் அழைப்பின் பேரில் அண்ணாத்துரைக்கான இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரை தான். ‘அவரை அறிஞர் என்று மூடர்களேக் கூறுவர். பேரறிஞர் என்று பெருமூடர்களேக் கூறுவர்என்று இரங்கல் கூட்டத்தில் இடி முழக்கம் செய்தார் ஜெயகாந்தன். அப்படி அவர் பேசி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்குப்பின் இப்போதும் இணையத்தில் அதிகம் படிக்கப்படும் ஒரு பேருரை என்றால் அதுவாகத்தான் இருக்கும். அண்ணாத்துரையை பேரறிஞர் என்று நினக்காதப் பலரும் கூட அந்தப் பேருரைக் கேட்டு முகம் சுளித்தார்கள் அல்லதுஅப்படிப் பேசி இருக்க வேண்டாம். அதுவும் இறந்து விட்ட ஒருவரைப் பற்றிஎன்று நினைத்தார்கள். இன்றும்

அந்த உரையை சாடுபவர்களும் சரி அதைக் கொண்டாடுபவர்களும் சரி அதிலுள்ள சில வரிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகின்றனர்முதற்கண் ஒன்றை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும்இரங்கல் கூட்டத்தில் பேசுவதற்காக கண்ணாதாசன் அழைத்த போது தன்னால் கடுமையான விமர்சனத்தையேக் கூற முடியுமென்று தெளிவாகக் கூறிவிடுகிறார் ஜெயகாந்தன். கண்ணதாசன் ஒப்புக் கொண்டதன் பேரிலேயே தான் பேசச் சென்றதாகப் பின்னர் எழுதினார் ஜெயகாந்தன்.

ஒரு சங்கடமான உண்மையை ஒரு ஜனத் திரளுக்கு சொல்லுவது எப்படி என்பதற்கு ஒரு சீரிய எடுத்துக்காட்டு அவ்வுரை ஒரு சீரிய எடுத்துக்காட்டு. ‘Mob’ என்பதற்கும் ‘gathering’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி எப்படி இறந்து போனவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதரென்றும் அப்படிப் பட்டவர்கள் சராசரியான ‘இறந்தவரைப் பற்றிக் குறைச் சொல்லலாகாது’ என்ற பன்பாட்டு முறைக்கு விதி விலக்கானவர்கள் என்று விளக்கிய பின் தான் தன் விமர்சணங்களை அடுக்குகிறார். 

தி.மு. எத்தகைய இயக்கமாக செயல்பட்டது, அது எப்படி ஒரு ஜனத்திரளைக் கவர்ந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது என்பது குறித்தும் அறிமுகமாவது செய்துக் கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஜெயகாந்தனின் உரையின் தேவையை உணர்த்தும்.

பெரியார் என்றழைக்கப்படும் .வெ.ராவின் தலைமையிலான திராவிடர் கழகமும் அதன் பின் அதிலிருந்து பிரிந்து அண்ணாத்துரையின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தங்களை ஒரு அரசியல் மாற்றத்தை உண்டுப் பண்ணுகிற இயக்கங்களாக மட்டும் முன்னிறுத்திக் கொள்ளவில்லை. .வெ.ராவும், அண்ணாத்துரையும் தங்களைக் கலாசாரக் காவலர்களாகவும், கலை இலக்கியங்களை கேள்விக்குட்படுத்தும் அறிவியக்கங்களாகவும் முன்னிறுத்தி அதன் பெயரில் அவர்கள் நிகழ்த்திய பிரசாரங்களே ஜெயகாந்தன் எனும் எழுத்தாளரை போர்குனமிக்க பிரசாரகாக வெளிக்கொணர்ந்தது.

திருச்சியில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில்ஐவருக்கு ஒருத்தி என்பது என்ன ஒழுக்கம். அது என்ன இதிகாசம். அதைக் கொளுத்துங்கள்என்றார் .வே.ரா. சிங்கமென எழுந்தார் ஜெயகாந்தன், “நான் எழுத்தாளன். நான் என்ன எழுத வேண்டுமென்பதை நானே தீர்மானிக்க வேண்டும்என கர்ஜித்தார்.  

தாலி, ஊழ், ஊரை எரிப்பது என்றெல்லாம் பேசிய சிலப்பதிகாரம்தமிழர் காவியம்எனக் கொண்டாடப்பட்டது. கம்ப ராமயாணமோஆரிய சூழ்ச்சியாகவும்ஆபாசக் குப்பையாகவும் ஏசப்பட்டது, அதை தோலுரிப்பதற்காகவேகம்ப ரசம்எழுதி தன்னை இலக்கியவாதியாக நிறுவிக் கொண்டதோடல்லாமல் பொது மேடைகளில் ரா.பி. சேதுபிள்ளையை சமர் செய்து தோற்கடித்துவிட்டதாகவும் பேரறிஞர் தம்பட்டம் அடித்தார்

முத்தமிழ் என்று இல்லாத ஒன்றை வழிமொழிந்தனர். அது என்ன முத்தமிழ் என்றால் இயல், இசை நாடகம் என்றனர். சிலப்பதிகாரம் நாடக இலக்கியம் என்று சொல்லப்பட்டது. முத்தமிழ் என்பது பிழை, ‘நாடக இலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று தமிழில் இல்லை’ என்று தமிழர்களுக்கு சொல்லிகொடுத்தார் ஜெயகாந்தன்.

இதோ உங்களுக்கோர் பெர்னார்ட் ஷா” என்று கல்கி பேரறிஞரைக் குறிப்பிட்டபோது உடன்பிறப்புகள் புளங்காகிதம் அடைந்தனர். ‘கல்கியே சொல்லிவிட்டார்’ என்றார்கள். ஜெயகாந்தன், “உங்கள் தகுதிக்கு இவர்தான் பெர்னார்ட் ஷா என்பதை தான் நயமாக கல்கி கூறினார்அதுக் கூட உங்களுக்குப் புரியவில்லை” என்று நகைத்தார்

பூகோள வரைப்படத்தில்கூட அமெரிக்காவைக் கண்டிராத பாமரர்களிடம் பேரறிஞர்அமெரிக்காகாரன் ஆயுத பூஜைக் கொண்டாடுவதில்லை அதனால் அங்கே அறிவியல் வள்ர்கிறதுஎன்றார். தேர்தல் வந்தவுடன்ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கண்டுபிடித்தார்கள். யார் அந்த தேவன் என்று அவர்களுக்கேத் தெரியாது

அரசியல் மேடைகளிலும் நாகரீகம் அழிந்தது. தேச விடுதலைக்காக தன் ஊணையும் உயிரையும் பணயம் வைத்துப் பல வருடங்களை சிறையில் கழித்த நேருவை ஏகடியம் செய்துநேருவின் முதுகிலே கல் சுமக்க வைப்போம்என்றார் ஓடாத ரயில் முன்புப் படுத்து சிறை சென்றவர். உலகம் போற்றும் மஹாத்மாவை காந்தியார் என்று மட்டுமே விளிப்போம் என இன்றுவரைக் கூறுவதற்கு ஒருக் கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. ராஜாஜியை ஆச்சாரியர் என்றும், குல்லுக பட்டர் என்றும் விளித்து தங்கள் நாகரீகமின்மையை பறைச் சாற்றிக் கொண்டார்கள். நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவாகப் பேசும் நரகல் பகடிகள் மேடையேறியது திராவிட அரசியலின் நன்கொடை. 

உலகில் வேறெங்கிலும் நடக்காத அசிங்கம் தமிழகத்தில் நடந்தது. பல காரணங்களை சொல்லித் தாய்க் கழகத்திலிருந்து பிரிந்தவர்கள் அந்தக் காரணங்களுள் தாங்கள் இதுகாறும் போற்றிய முதுபெரும் தலைவன் வயதில் மிக இளையப் பெண்ணை, அப்பெண்ணின் பூரண சம்மதத்தோடுதான் என்றாலும், மணம் முடித்துவிட்டார் என்ற ஒன்றையும் சேர்த்துக்கொண்டார்கள்

இங்கே நான் வரைந்தது மிக சுருக்கமான ஒரு வரைப்படமே. தனி மனித ஒழுக்கமோ, விசால ஞானமோ இல்லாததோடல்லாமல் எதுப் பற்றியத் தெளிவுமின்றி, எதுப் பற்றிய புரிதலுமின்றி ஆனால் சகலத்தையும் பற்றிக் கருத்துகளை கட்டமைத்து ஒரு சமூகத்தின் ஆன்ம மற்றும் ஞான மரபின் சிதைவுக்கு கால்கோள் நடத்திய வீணர்களை உண்மத்தத்தோடும் ஞானாவேசத்தோடும் எதிர்க்கத் தலைப்பட்டவர்தான் ஜெயகாந்தன்.
பத்மநாபா கொலையுண்ட பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் ஜெயகாந்தன் மீண்டும் தான் சிங்கம் என்பதை நிரூபித்தார். அன்றைய தேதியில் எல்.டீ.டீ.யினரை விமர்சிப்பது என்பது மிகவும் துணிச்சலைக் கோரும் ஒரு செயல். அமிலம் கக்கினார் ஜெயகாந்தன். ‘அவர்கள் தமக்கே நண்பர்களில்லைபுரட்சிக் காரர்களல்ல பாஸிஸ்டுகள்வன்முறையை தவிர வேறொன்றும் அறியாதவர்கள்என்றார். 2009-ஆம் ஆண்டு நடந்தேறிய மனித அவலம் அவரின் தீர்க்க தரிசனத்தை மிகத் துல்லியமாக காண்பித்தது. (காணோளி கீழே)



இந்த இரு இரங்கல் பேச்சுகளும் நமக்கு ஜெயகாந்தன் குறித்து ஒரு முக்கியமான புரிதலைக் கொடுக்கின்றன. ‘ஞானாவேசம்எனும் சொற்றொடர் அவருக்கு மிகவும் உவப்பான ஒன்று. ‘ரொளத்திரம் பழகு’, ‘அச்சம் தவிர்என்ற அவரின் ஆசானின் கூற்றுக்கிணங்க பயமென்றால் என்னவென்றே அறியாதவர் ஜெயகாந்தன். அதிகார மையங்கள், சினிமா கவர்ச்சி, தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் இவற்றில் எதுவுமே அவரின் முன் ஒடுங்கி சத்தியமும் அறமும் ஓங்காரமாக அவரிடமிருந்து வெளிப்பட்டன

ஜெயகாந்தன் காந்தியை தன் மனத்தில் இருத்திக் கொண்டதால் மஹாத்மாவின் பல நம்பிக்கைகளையும், தான் சார்ந்த கம்யூநிஸ்ட் கட்சியின் எதிர்ப்புகளை உதாசீனப் படுத்திவிட்டு, சுவீகரித்துக் கொண்டார். காந்தியைப் போல ஜெயகாந்தனும் வர்ணாஸ்ரமத்தை தூக்கிப் பிடித்துப் பலரின் எரிச்சலுக்கு ஆளானார் தனி மனித சுதந்திரத்தைப் பற்றி எழுதி தீர்த்தவர் இந்திராவின் அவசர கால பிரகடணத்தை ஆதரித்தார்ராஜீவ் கொல்லப்பட்ட போது பிரியங்காவை தலைவராகப் பார்ப்பதாக எழுதியதாக ஞாபகம்

ஜெயகாந்தனின் பலமே தன் நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ளத் தயங்கியதேயில்லை. பத்மநாபா இரங்கல் கூட்டத்தில் அவர் வெளிப்படையாக சோவியத் கனவு தகர்ந்ததற்கு அந்தப் புரட்சி வன்முறையையேக் கொண்டு பிறந்ததே என வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

சமீபத்தில் படிக்கக் கிடைத்த ஜெயகாந்தன் கட்டுரைகளில் இருந்து தெளிவாகப் புரிந்துக் கொண்டது அவர் எம்.ஜி.ஆர் தி.மு.கவைத் தோற்கடித்தப் பின் கலைஞரை, அப்படித்தான் 80-களிலேயே கருணாநிதியை அழைத்தார், நோக்கித் திரும்ப ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் தன்னைப் பார்க்க விழைந்ததையும் தான் தவிர்த்ததையும் ஒரு பேட்டியில் சொன்னவர் கருணாநிதியோடு வெகு காலம் நட்பாகவே இருந்திருக்கிறார். இதுப் பற்றி தனியாக அடுத்து எழுதுகிறேன்.

ஜெயகாந்தனும் ஆர்.எஸ்.எஸ்சும்


சமீபத்தில் இந்துத்துவர்கள் ஜெயகாந்தனை சுவீகரித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். (அதுப் பற்றிய என் விரிவான கட்டுரை ஜெயகாந்தனின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க  ). 

ஆர்.எஸ்.எஸ்-இன் உடற்பயிற்சி முறைகளைப் பகடிச் செய்கிறார் ஜெயகாந்தன். "பாவம் இந்தப் பிராமணப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் வாளும் கேடயமும் தூக்கிக் கொண்டு, பண்டைக் காலக் காட்டுமிராண்டிகள் போல் ஆடுகிறார்களே" என்று நகைக்கிறார். 

இரண்டாம் உலக யுத்தம் முடிந்திருந்த காலத்தில், அப்போது ஜெயகாந்தனுக்கு 10-11 வயது, டாங்கிகளும், போர் விமானங்களும் அறிமுகமாகியிருந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ்-இன் உடற்பயிற்சி முறைகளைப் பகடிச் செய்கிறார் ஜெயகாந்தன். "பாவம் இந்தப் பிராமணப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் வாளும் கேடயமும் தூக்கிக் கொண்டு, பண்டைக் காலக் காட்டுமிராண்டிகள் போல் ஆடுகிறார்களே" என்று நகைக்கிறார். அவர்களின் அரசியல் குறித்து அடுத்துக் காட்டமாகச் சொல்கிறார்.
" 'நான் ஒரு ஹிந்து' என்று ஒரு வகை, அருவறுக்கத்தக்க ஆவேசத்துடன் இவர்கள் கூறிக் கொண்டார்கள். அமைதியும் சாந்தமும் அகிம்சையும் வடிவமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கிற மஹாத்மா காந்திஜியின் மூலம் இந்த 'ஹிந்து' என்ற வார்த்தைக்கு உயரிய பொருள் கொண்டு - நானும் ஒரு ஹிந்துவே என்று உணர்ந்தவன் நான். ஆயினும் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் 'நான் ஹிந்து...ஹிந்து' என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு நின்ற போது - 'நான் ஹிந்து இல்லை...ஹிந்து இல்லை' என்று கத்திக்கொண்டு ஓட வேண்டும் போல் எனக்குத் தோன்றியது"
"தமிழகமே உஷார்! இவர்களைச் சந்திக்கத் தயார் நிலையில் நில்!" என்கிறான் 'ஆல் அமர்ந்த ஆசிரியன்'

ஜெயகாந்தனிடம் நான் கண்டது


ஜெயகாந்தனின் விசாலப் பாரவையை எடுத்துக் காட்ட இரண்டு மேற்கோள்கள். 
"எனது கருத்துக்களை கேட்கிறவர்களும், படிக்கிறவர்களும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்ப்பார்ப்பதுமில்லை. அதற்கு எதிரான மாறுதலான கருத்துகள் ஏற்கனவே நிலவி வருவதை நன்கு தேர்ந்தப் பிறகே நான் அவற்றை வெளிப்படுத்துகிறேன். அதன் மீது விவாதமும் ஆதரவும் மறுப்பும் ஏற்படுவது அவற்றின் இயல்பேயாகும் என்பதால் எனது கருத்துகளை மறுப்பவர்கள் மீதும், மாறுபாடு கொள்பவர்கள் மீதும் எனக்கு மாச்சர்யங்கள் ஏற்படுவதில்லை"
"இது எனது பார்வை. இது ஒன்று தான் பார்வை; இதுவே சரியான பார்வை என்பதோ, வேறு பார்வைகளை நான் மறுக்கிறேன் என்றோ இதற்குப் பொருள் அல்ல. எனது பார்வைக்கு என்று நான் எடுத்துக் கொள்ளுகிற விஷயங்களும் மனிதர்களும் எனது பார்வைக்குள் மட்டும் அடங்கி விடுகிறவை அல்ல. அவை மேலும் மேலும் அறியத் தகுந்தன. அவற்றின் வரம்பும் எல்லைகளும் விரிக்க விரிக்கப் பெருகும் இயல்புடையன."
தனக்கு இரண்டு மனைவியர் என்பது குறித்தும் அவர் வெளிப்படையாகவே எழுதியதாக நினைவு. பிரபலங்கள் தயாரிக்கும் குமுதம் என்றொரு சீரீஸ் 90-களில் வந்தப் போது ஒரு இதழை தயாரித்தவர் ஜெயகாந்தன். அவ்விதழில் லட்சுமியை பேட்டி எடுத்திருப்பார், கஞ்சா புகைக்கும் போட்டொவும் இருக்கும். அதிலே தான் 'என் தந்தை வழியில் எனக்கும் இரண்டு மனைவியர்' என்று அவர் எழுதியதாக நினைவு.  ஆயினும் அவர் இறந்தப் பின் வெளியான அஞ்சலிக் குறிப்புகளில் ஒன்றை தவிர வேறு எங்கும் அவ்விஷயம் குறிப்பிடப்படவில்லை. அவருடைய தன் வரலாற்று நூல் என்ற வகைக்கு அருகில் வரக் கூடிய நூல்கள். அவை எல்லாமே வெளிப்படையானவை, வாசிக்க சுவாரசியமானவை. 

மனிதர்களைஇந்தியாவைதமிழை நேசித்தவர்பிரிவினைகளைபகைமைகளைசிறுமைகளை தொடர்ந்துச் சாடியவர்கலாச்சாரம்மொழி என்று எந்த ரூபத்திலும் பாஸிஸத்தை எதிர்த்தவர்காந்தியைபாரதியைநேருவைகம்பனை நேசித்த கம்யூனிஸ்ட். ஜெயமோகனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ஜெயகாந்தன், வரும் தலைமுறைகளுக்கு, "ஆல் அமர்ந்த ஆசிரியன்". 


பின்குறிப்பு


இக்கட்டுரை 'காலச்சுவடு' மாத இதழில் 2015 மே மாதம் முதலில் வெளியானது. அக்கட்டுரையை அப்படியே வெளியிடாமல் தக்க மாற்றங்கள் செய்து இங்கு எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் சாதாரண எடிட்டிங் தான். முக்கியமான மாற்றம் கருணாநிதியுடனான ஜெயகாந்தனின் உறவுப் பற்றி எழுதியதும் ஆர்.எஸ்.எஸ் பற்றி அவர் எழுதியதை இன்னொரு கட்டுரையில் இருந்துச் சேர்த்ததும் தான். அப்போது வாய்ப்பளித்த 'காலச்சுவடு' ஆசிரியருக்கு நன்றி. 

1 comment:

shariff said...

Good article as usual Very informative forwarded to many