Showing posts with label Sengottaiyan. Show all posts
Showing posts with label Sengottaiyan. Show all posts

Thursday, February 16, 2017

ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமா? காமராஜர் முதல் செங்கோட்டையன் வரை

செங்கோட்டையன் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டக் கேள்விக்கு அர்த்தம் புரியாமல் உளறிச் சென்றது இப்போது இணையத்தில் பரவி வரும் நகைச்சுவை. நண்பர் ஒருவர் செங்கோட்டையனுக்கு வக்காலத்து வாங்குகிறார், "ஆங்கிலம் தெரியாவிட்டால் தான் என்ன? காமராஜர் இல்லையா? எம்ஜியார் இல்லையா?" என்று. இது மிகவும் தவறு. மிக மோசமான முன்னுதாரனங்கள்.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு போல் அதுவும் ஒரு மொழி. ஆங்கில மொழித் திறன் உடையோர் அத்திறம் இருப்பதேலேயே நல்ல அறிஞர்களாகவோ நேர்மையாளர்களாகவோ இருப்பார்கள் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. அதே போல் ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிஞர்களாகவும், பண்பாளர்களாகவும் இருக்கக் கூடும்.
மேற்சொன்ன டிஸ்கியை மனத்தில் இருத்தி மேற்கொண்டு படிக்கவும். ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு மிகப் பெரிய அறிவுலகின் நுழைவாயில். ஆங்கிலம் தெரியாவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது. ஆனால் அறிவுத் தளத்தில் செயல்படும் எவருக்கும் அது ஒருக் குறைபாடாகவே இருக்கும். தமிழில் எழுதும் பலரிடம் இக்குறைபாடு தெரிகிறது. மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் மட்டுமே பலரின் அறிதலின் எல்லை. இன்று தமிழில் எழுதப்படும் அபுணைவு நூல்கள் பலவற்றின் தரம் இதனாலேயே மிக வருந்த தக்க தகுதியில் இருக்கின்றன. புனைவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நல்ல புனைவாசிரியன் உலக வரலாறு, தத்துவம் மற்றும் இன்ன பிறவற்றிலும் சமகாலத்தில் வரும் நல்ல நூல்களின் அறிமுகத்தைப் பெற்றிருக்க வேண்டும். 

மீண்டும், மீண்டும் காமராஜர் பற்றிய உதாரணம் சொல்லப்படுகிறது. காமராஜர் நல்லவர் ஆனால் முதன்மையான சிந்தனையாளரல்ல. காந்தியும், நேருவும் தேர்ந்த சிந்தனையாளர்கள். படேலும் கூடச் சிந்தனையாளர் அல்ல. நேருவின் சிந்தனையின் வீச்சம், அது இந்தியாவின் நிர்மானத்தில் வகித்தப் பங்கு ஆகியவை வரலாறை உணர்ந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். படித்தவர்கள் அயோக்கியத்தனம் செய்வதாலேயே அவர்களை ஒதுக்கி படிக்காதவர்களை முன்னிறுத்துவது மடமை. கம்யூனிசத்தின் பேரால் அராஜகம் செய்தவர்கள் படித்த அறிவு ஜீவிகள். ஆனால் அவர்கள் முகத்திரையைக் கிழித்தவர்கள் பாமரர்கள் அல்ல. படித்தவர்கள் தான் அதைச் செய்தார்கள். இன்று அயோக்கியத்தனம் செய்யும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்குக் கூழைக் கும்பிடு போடும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் பார்த்துப் பார்த்து நமக்கெல்லாம் கக்கனும் நல்லக்கண்ணுவும் பேராளுமைகளாகத் திகழ்கிறார்கள். கல்வி அமைச்சர் என்பவருக்கு ஆங்கிலத்தில் கவிதைப் புனைய தெரிய வேண்டாம். ஷேக்ஸ்பியரை பிரித்து மேய வேண்டாம். ஆனால் ஒரு புத்தகத்தையாவது படித்தறியும் அறிவு வேண்டாமா? செங்கோட்டயனை இகழும் பலர் அவருக்கு ஆங்கிலம் தெரியாததற்காக மட்டும் இகழவில்லை. அவர் ஒரு தற்குறி என்ற பிம்பத்தின் உறுதிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. இரண்டு நல்ல கல்வியாளர்களிடமாவது அவர் உரையாட முடியுமா? ஒரு கருத்தரங்கிலாவது அவரால் பத்து நிமிடத்திற்கு உரையாற்ற கூட வேண்டாம் அங்குப் பேசும் கருத்துகளைக் கேட்டுப் புரிந்து கொள்ள முடியுமா? கல்வியமைப்பு பற்றி எத்தனையெத்தனை புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன ஆங்கிலத்தில் அவற்றின் தமிழாக்கத்தைத் தந்தால் கூடச் செங்கோட்டயனுக்குப் புரியாதே?
ஆங்கிலதத்தில் சரளமாக உரையாற்றும் ஸ்மிரிதி இரானியின் பிரச்சனை அவர் ஆங்கிலம் தெரிந்த தற்குறி என்பது தான். அவர் கல்வி அமைச்சரானவுடன் அவர் ஆங்கிலத்தில் விளாசிய வீடீயோக்களைப் பலர் பகிர்ந்து "பாரீர், படிக்காதவர் என்று இகழாதீர்" என்று புளங்காகிதம் அடைந்தனர். மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தும் நேருவும் நிர்மானித்த இந்தியக் கல்வி அமைப்புக்கு நிகராக ஒரு செங்கல்லைக் கூட எழுப்பத் தெரியாத மூடர் ஸ்மிரிதி இரானி. கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற ரவுடியும் ஷத்ருகன் ஸின்ஹா போன்ற ஒருவரும் மருத்துவத் துறையின் மந்திரிகளானது இந்தியாவின் சாபக் கேடு. சித்தார்த்தா முகர்ஜி புற்று நோய் பற்றி எழுதிய புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களையாவது படிக்கும் அறிவிருந்தால் இந்தியாவில் புற்று நோய் சிகிச்சை இந்த நிலையில் இருக்காது. பாவம் மந்திரிகளைச் சொல்லி என்ன பயன் ஆங்கிலம் அறிந்த நம் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களில் பலரும் அந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.
செங்கோட்டையன், இரானி போன்றவர்கள் படிக்காத தற்குறிகள் என்றால் இன்னொரு பக்கம் அண்ணாதுரை, தமிழச்சித் தங்கப் பாண்டியன் போன்றவர்கள் இன்னொரு வகை. இரு மொழிப் புலமை எல்லாம் இருந்தும் எதையும் நேர்மையாகப் புரிந்துக் கொள்ளவோ நேர்மையாக விவாதிக்கவோ தெரியாதவர்கள். தங்கள் அரசியல் பார்வைகளுக்குத் தக்கவாறு உண்மைகளைத் திரிப்பது, சர்க்கரைத் தடவிய மொழியில் அப்பட்டமான பொய்களை விநியோகம் செய்வதில் சமர்த்தர்கள். அவர்களின் சாமர்த்தியம் கேட்பவர்களின் சாமர்த்தியமின்மையைப் பொறுத்து வெற்றிப் பெறும். பெர்னார்ட் ஷாவை படித்த யாரும் அண்ணாதுரையைப் பெர்னார்ட் ஷா என்று சொல்ல மாட்டார்கள். மு.க. அழகிரி இந்தியாவின் மிக முக்கிய ரசாயனத் துறைக்கு அமைச்சர். அழகிரி போன்ற ஒருவர் அமைச்சரானால் அதிகாரிகளின் கொட்டம் தாள முடியாது. சுய புத்தியோ படித்தறியும் புத்தியோ இல்லாத அழகிரி அதிகாரிகளின் கைப்பாவை. பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க அழகிரி டிமிக்கி கொடுத்து விடுவார். பாவம், பொட்டுச் சுரேஷ் போன்ற மெய்ஞானிகளோடு இனைந்து திருமங்கலம் பார்முலா கண்டுபிடித்த விஞ்ஞானிக்குப் போறாத காலம். (ஆனால் ஒரு விஷயத்தில் நான் ஆழகிரியை ஆதரிப்பேன். இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி-பதில் இருக்க வேண்டும் என்பது தவறு. 18 மொழிகளிலும் பேச உரிமை வேண்டும். ஐநா சபையில் அவரவர் மொழியில் பேசும் வசதி இருப்பதைப் போல் இந்தியப் பாராளுமன்றம் மாற வேண்டும்) தமிழாக்கங்களின் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முன்பொருமுறை ஒரு எழுத்தாளர் ஆங்கிலக் கதை ஒன்றின் தமிழாக்கத்தை வெளியிட்டிருந்தார் தன் வலைத் தளத்தில். நான் அதன் மூலத்தைத் தேடிப் படித்தால் மூலத்திற்கும் மொழிமாற்றத்திற்கும் ஏழாம் பொருத்தம். எழுத்தாளருக்கு எழுதினேன். அவர் தான் பிரயோகித்த மொழிமாற்றம் தவறானது என்று ஒப்புக் கொண்டு பிறகு ஒரு மேடையில் அந்தத் தவறான மொழிமாற்றக் கதையையே திருப்பிச் சொன்னார். சலபதி அவர் தகுதிக்கு மீறி இன்று வரலாற்றாசிரியராகப் பேசப் படுகிறார். அவருக்கு வரலாறும் சரி ஆங்கிலமும் திண்டாட்டமே. ஜெயலலிதா சசிகலாவை 'உடன் பிறவா சகோதரி' என்றழைத்ததை "notblood sister" (அப்படியே தான்) என்று மொழி 'பெயர்த்து'....இருக்கிறார். கொஞ்சம் ஆங்கில வரலாற்றிசிரியர்களைப் படித்த யாரும் புறங்கையால் தள்ளிவிடக் கூடியவர் தான் சலபதி. 
செங்கோட்டையன் என்றில்லை தமிழில் எழுதும் பலரும் கொஞ்சமாவது ஆங்கிலத்தில் வந்திருக்கும் நூல்களை பரிச்சயப்படுத்திக் கொண்டால் அவர்கள் எழுத்தும் ஆக்கமும் செம்மையுறும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஸ்டீபன் க்ரீண்பிளாட் லுக்ரீஷியசின் கவிதைப் பற்றி எழுதியப் புத்தகத்தைப் படித்துவிட்டு கம்பனப் பற்றிப் புத்தகம் எழுதினால் அது இன்னும் சிறக்கும். வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் பாரதியின் வாழ்க்கைப் பற்றி எழுதப் புகும் போது ஒரு விஸ்தீரனமானப் பார்வைக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் மலிவுப் பதிப்புகளைப் பார்த்தால் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் அவல நிலைப் புரியும்.
இன்று அமெரிக்காவில் கல்வித் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் பெட்ஸி டேவோஸ் என்பவருக்குக் கல்வித் துறையில் அனுபவமில்லாததோடு அமெரிக்காவில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளிக் கல்வி முறைப் பற்றி எதிர்மறையான கருத்துகளுடையவர் என்று அவருக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அவர் அதையும் மீறி கல்விதுறை செக்ரட்டரி ஆனார். ஆனால் இங்கிருக்கும் நண்பரோ செங்கோட்டையன் மந்திரி ஆனால் என்ன? எம்.ஜி.ஆர் திறமையான அரசியல்வாதி இல்லையா என்கிறார். டிரம்புக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டு அவர் எதையும் படித்தறியும் ஆர்வமில்லாதவர் என்பது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஆளுநர்கள் அவர்களுக்காக நடத்திய கூட்டத் தொடர் ஒன்றில் சில மணி நேரங்களை ஒதுக்கி அமெரிக்காவின் முக்கியச் சிந்தனையாளர்கள், கல்வியாளர்களோடு கலந்துரையாடல் நடத்தினார்கள். அமெரிக்கா என்பது சொர்க்கப்புரியா, இங்கு ஏற்றத் தாழ்வுகளும், கயமைகளும், கீழ்மைகளும் இல்லையா என்று கேட்டால் நிச்சயமாகச் சொர்க்கப்புரியில்லை அந்தக் குறைகளெல்லாம் உள்ளன என்று சொல்லலாம். ஆனால் செங்கோட்டையனும், ஸ்ம்ரிதி இரானியும் இங்குக் கல்வி அமைச்சராக முடியாது, அல்லது மிக, மிகக் கடினம்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து சுத்தம் செய்யும் பெண்மனி ஒருவர் வரவேண்டும் என்றார் காந்தி. காந்திக்கு அவ்வப்போது இதுப் போன்ற விபரீதங்களும் தோன்றும். இதுப் போன்றக் கருத்துகள் கோஷங்களாக முன் வைக்கப்படும் போது மிகக் கவர்ச்சியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் ஆபத்தானது.

கல்விக்கு முதன்மைக் கொடுத்த பண்பாட்டில் இன்று செங்கோட்டையனுக்கு வக்காலத்து வாங்குவது அதிர்ச்சி.

ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்_பால் ஒருவனும் அவன் கண் படுமே