Thursday, September 10, 2020

பாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்

 செப்டம்பர் 11 1921-இல் பாரதி இறந்த போது வயது 38. அதற்குள்ளாக அவன் எழுதியதையெல்லாம் தொகுத்த படைப்பு 16 தொகுதிகளை எட்டுகிறது. பாரதி தமிழின் அடையாளம், இந்தியாவின் அடையாளம். பாரதியியல் என்று கூறத் தக்க அளவில் இப்போது பாரதி எழுத்துகளின் தொகுப்புகளும் பாரதி பற்றி மற்றவர்கள் எழுதியவையும் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 11 அன்று முகநூலில் பலரும் பாரதியின் ஏதோ ஒரு பிரபலமான கவிதையை பகிர்வார்கள். இவ்வருடம் வேறு ஏதாவது அர்த்தமுள்ளதாகச் செய்யலாமே என்ற ஆசையில் கடந்த சில வருடங்களாக பாரதி பற்றிய புத்தகங்களை தேடித் தேடி வாங்கியவற்றை ஒரு பட்டியலிட்டால் பாரதி ஆர்வலர்களுக்கு அது உபயோகமாயிருக்கும் என்று எண்ணியதன் விளைவு இப்பதிவு. 



1. கால வரிசையில் பாரதி படைப்புகள் - தொகுப்பாசிரியர் சீனி விசுவநாதன். 16 தொகுதிகள். அல்லயன்ஸ் பதிப்பகம். 2015 வெளியீடு. ரூ 10,000. ஒரு பல்கலைக்கழக துறை செய்ய வேண்டிய வேலையை ஒரு தனி மனிதர் செய்து முடித்திருக்கிறார். பகீரத பிரயத்தனம். பாரதி எழுதிய அனைத்தும் கால வரிசையில், எங்கெங்கு விளக்கக் குறிப்பு அங்கெல்லாம் விளக்கத்தோடு தொகுக்கப்பட்டது. இத்தொகுதிப் பற்றியும் பாறதி மகாகவியா என்பது பற்றியும் நான் எழுதிய கட்டுரை https://contrarianworld.blogspot.com/2016/07/collected-works-of-bharathi.html

2. கால வரிசையில் பாரதி பாடல்கள் - தொகுப்பாசிரியர் சீனி விசுவநாதன். இது ஒரு தொகுதி, பாடல்கள் மட்டும் கால வரிசையில் தொகுக்கப்பட்டது. முக்கியமான மேலதிக தகவல்கள் அடங்கிய தொகுதி. பாரதி பாடல்களின் இசை வகைமை, பெயர்கள் எந்த வெளியீடுகளில் யாரால் எப்படி மாற்றப்பட்டது என்பனப் போன்றவை சிரத்தையோடு சேர்க்கப்பட்டுள்ளன.  வெளியீடு சீனி. விசுவநாதன். ரூ650 (2012). 





3. பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 1) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். சந்தியா பதிப்பகம். 2017 வெளியீடு. ரூ 1000. பாரதியின் நண்பர்களும் குடும்பத்தினருன் எழுதிய கட்டுரைகளை மிகுந்த சிரத்தையோடு தொகுத்திருக்கிறார் கடற்கரய். பாரதியின் சீடர் கனகலிங்கம், செல்லம்மா பாரதி, தங்கம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, வ.உ.சி, உ.வே.சா, பரலி நெல்லையப்பர், யதுகிரி அம்மாள் ஆகியோரின் கட்டுரைகளும் சிறு நூல்களும் அடங்கிய தொகுதி. கனகலிங்கம் மற்றும் யதுகிரி அம்மாளின் சிறு நூல்கள் முக்கிய ஆவணங்கள்.

4. பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 2) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். சந்தியா பதிப்பகம். 2020 வெளியீடு. ரூ 220. முந்தையத் தொகுதியில் வெளியான கட்டுரைகள் மேலும் செம்மையாக்கப்பட்டு மேலதிக கட்டுரைகளோடு வெளியான இரண்டாம் தொகுதி.

5. பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள் -- முனைவர் ய. மணிகண்டன். பாரதி புத்தகாலயம் வெளியீடு (2016). ரூ 140.  பாரதி சமகாலத்தில் அங்கீகரிக்கப்பட்டானா? பாரதியின் 'இந்தியா' பத்திரிக்கையில் எழுதிய தமிழறிஞர்கள் என்று அதிகம் அறியப்படாத செய்திகளை தொகுக்கும் புத்தகம்.

6. மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் -- முனைவர் ய. மணிகண்டன். பாரதி புத்தகாலயம் வெளியீடு (2013). ரூ 70.  பாரதி சங்க இலக்கியம் பயின்றவனா? பாரதிக்கு பழந்தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சியுண்டா என்ற விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக எழுதப்பட்டது.

7. பாரதியின் இறுதிக் காலம்: 'கோவில் யானை' சொல்லும் கதை -- ஆய்வும் பதிப்பும் முனைவர் ய. மணிகண்டன். வெளியீடு காலச்சுவடு (2015). ரூ 60. யானை தன்னை தாக்கிய நிகழ்வை வைத்து பாரதி எழுதிய சிறு நாடகம் 'கோவில் யானை'. "பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும்" நூல் என்று பதிப்பக குறிப்புச் சொல்கிறது.




8. பாரதியைப் பற்றி நண்பர்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். வெளியீடு காலச்சுவடு (2016).ரூ 225. கடற்கரய் தொகுத்த 'பாரதி விஜயம்' தொகுதியில் காணும் கட்டுரைகளில் சில இந்த நூலில் இருக்கும்.

9. பாரதியின் கடிதங்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். வெளியீடு காலச்சுவடு (2016). ரூ 100. பாரதியின் கடிதங்கள், குறிப்புகள் அடங்கிய சிறு தொகுதி.

10. பாரதியார் கவிநயம் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன்.  வெளியீடு காலச்சுவடு (2016). ரூ 225. பாரதியின் கவி நயம் பற்றி வ.ரா, ராஜாஜி, வையாபுரி பிள்ளை, கு.பரா, புதுமைப் பித்தன், திரிலோக சீதாராம், குகப்ரியை, வை.மு.கோதைநாயகி அம்மாள் முதலானோர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு.




11. பாரதி -கவிஞனும் காப்புரிமையும்: பாரதி படைப்புகள் நாட்டுமையான வரலாறு -- அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2015). ரூ 120. பாரதியின் கவிதைகள் நாட்டுடுமையானது சுவையான கதை. இப்புத்தகம் பற்றிய என் மதிப்பீடு https://contrarianworld.blogspot.com/2016/02/bharathi-from-being-copyrighted-to.html

12. பாரதி கருவூலம்: 'ஹிந்து' நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (முதல் முறையாக நூல் வடிவில்) -- அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2014). ரூ 175. பாரதி 'ஹிந்து' நாளிதழுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிங்கள். ஆங்கிலத்திலும் சரளமான பாரதியின் எழுத்துகள் ஆச்சர்யபடுத்தும். ஆங்கில கடிதங்களுக்கு தமிழாக்கமும் அருகிலேயே கொடுத்திருப்பது சிறப்பு.

13. பாரதி: 'விஜயா' கட்டுரைகள் (முதன்முறையாக நூல்வடிவில்) -- தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2017). ரூ 450. "பாறதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு 'விஜயா'. 1909-1910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான" நாளேடு, "இது வரை ஓரிதழ் கூட முழுமையாகக் கிடைக்காத 'விஜயா'வின் பல இதழ்களை பெருமுயற்சி செய்து பாரீசில் கண்டுபிடித்து" மேலும் "அரசின் இரகிசிய ஆவணம்" மற்றும் பாரதி "பங்கெடுத்துக் கொண்ட பிராமண சபைக் கூட்டம் பற்றி ஓர் அரிய ஆவணமும் நூலில் இடம்பெற்றுள்ளன" என்கிறது பதிப்பக குறிப்பு.

14. எழுக, நீ புலவன்! : பாரதி பற்றிய கட்டுரைகள் --தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2016). ரூ 250. பாரதி பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?, பாரதி பார்வையில் தாகூர், பாரதி படைப்புகள் எப்படி வெளியாயின அக்காலத்தில் எழுத்து மற்றும் பதிப்பகச் சூழல் எப்படி இருந்தது, என்பன போன்ற கட்டுரைகள் அடங்கிய தொகுதி.




15. என் குருநாதர் பாரதியார் - ரா. கனகலிங்கம். வெளியீடு அகரம் (2015). ரூ 80. பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட சீடர் என்று பரவலாக அறியப்பட்ட ரா.கனகலிங்கம் எழுதிய முக்கியமான நூல். சுவையான தகவல்கள் அடங்கியது. இப்புத்தகத்தை பற்றிய என் கட்டுரை https://contrarianworld.blogspot.com/2020/03/blog-post.html




16. மகாகவி பாரதியார் - வ.ரா. வெளியீடு தோழமை (2011). ரூ 75. தகுதிக்கு மீறி மிகப் பிரபலமாகிவிட்ட பாரதி பற்றிய வாழ்க்கை வரலாறு. 

17. பாரதி நினைவுகள்: ம.கோ.யதுகிரி அம்மாள் -- மீள் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். வெளியீடு சந்தியா பதிப்பகம். ரூ 150. க.நா.சு சுதேசமித்திரனில் யதுகிரி அம்மாளின் புத்தகம் பற்றி சுதேசமித்திரனில் 1956-இல் எழுதிய மதிப்புரை, அரிய புகைப்படங்கள், முதற்பதிப்புக்கு எழுதப்பட்ட முகவுரை என்று ஓர் ஆவணமாக தருகிறார் கடற்கரய்.




18. பாரதியார் சரித்திரம் -- செல்லம்மாள் பாரதி. வெளியீடு பாரதி புத்தகாலயம். ரூ 100.

19. மகாகவி பாரதியார் கட்டுரைகள் -- தொகுப்பாசிரியர்கள் ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம். வெளியீடு சாகித்ய அகாதெமி (2019). ரூ 280. நிறைய கட்டுரைகள் இதற்கு முன் வெளிவந்த பூம்புகார் வெளியீட்டை குறிப்பவை. ஆராய்ச்சியாளனை சோர்வடையச் செய்யும் வகையில் பாரதியின் மூல வெளியீட்டைச் சொல்லாமல் நிறைய கட்டுரைகள் பூம்புகார் வெளியீட்டை சுட்டிக் காட்டும். ஜெயகாந்தன் இதில் என்ன பங்காற்றினார் என்று தெரியவில்லை.

20. பாரதியார் கட்டுரைகள் -- பூம்புகார் வெளியீடு (2009). ரூ 75. எவ்வித குறுப்பும் இல்லாமல் வெறும் கட்டுரைகள் அடங்கியத் தொகுதி. தவிர்க்கலாம். ஆனால் மலிவு விலை, எளிதில் கிடைப்பது.

21. சித்திர பாரதி (220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரப்பூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு) -- தொகுப்பு ரா.ஆ.பத்மநாபன். வெளியீடு காலச்சுவடு (2006). ரூ 325.   




என் பரிந்துரைகள்: பாரதியை கையடக்க கவிதை வெளியீடுகள் தாண்டி அறிந்துக் கொள்ள ஒரு சராசரி வாசகன் எவற்றை வாங்கலாம் என்கிற என் பரிந்துரை. மேலேச் சொன்ன பட்டியலின் வரிசை எண்கள் கொண்டு இப்பரிந்துரை. 2 (பதிப்பில் இருந்ந்தால்), 3 அல்லது 4, 9, 12, 13, 15, 17, 21. 3-ஐ வாங்கினால் 15-ஐயும் 17-ஐயும் தவிர்க்கலாம். பாரதி பற்றி இன்றும் ஒரு முழு நீள வாழ்க்கை சரித்திரம் இல்லாதது பெருங்குறை. 

No comments: