Saturday, December 2, 2023

வரலாற்றின் புதைந்த பாதைகளைத் தேடி: ஜெ. பாலசுப்ரமணியமின் தலித் இதழியல் வரலாற்றாய்வுகள்

வரலாற்று மீட்டெடுப்பு ஏன்?


ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பற்றி பல நூறு மில்லியன் டாலர் செலவில் அமெரிக்க தலைநகரில் 2016-இல் ஓர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இன்று வரை மாதமொன்றுக்கு மில்லியன் பார்வையாளர்கள் வருகைத் தருகிறார்கள், கறுப்பினத்தவரின் மறைக்கப்பட்ட வரலாற்றை அவர்கள் அறிகிறார்கள். அந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்ட போது ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு பற்றி தொடர்ந்து ஆராய்ந்து எழுதும் ஹார்வர்ட் பேராசிரியரும் கறுப்பினத்தவருமான ஹென்றி லூயிஸ் கேட்ஸ் நியூ யார்க் டைம்ஸில் அந்த வரலாற்று மீட்டெடுப்பு ஏன் அவசியமானதென்று எழுதினார். அதிலிருந்து சில மேற்கோள்கள் இக்கட்டுரைக்கு முகமனாக உதவும்.


கறுப்பினத்தவர் அமெரிக்க பண்பாட்டுக்கு பங்களித்து இருக்கிறார்களா, அவர்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய சரித்திரம் இருக்கிறதா என்ற நீண்ட விவாதத்துக்கு இந்த அருங்காட்சியகம் ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது


மானுடத்துக்கும் வரலாறுக்கும் தொடர்புண்டு. ஐரோப்பிய சிந்தனையாளர்கள் கறுப்பினத்தவருக்கு வரலாறு இல்லை ஆகவே மானுடத் தன்மையுமில்லை என்று கருதினார்கள்”. ஆப்பிரிக்கா வரலாறு அற்ற பிரதேசம் ஆகவே பொருட்படுத்தத் தக்கத்தல் என்றார் ஜெர்மானிய தத்துவயியலாளர் ஹெகல்


இம்மாதிரி கருத்தாக்கங்களுக்கு எதிராகத் தான் கறுப்பினத்தவர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாற்றினை எழுதத் தொடங்கினர்”. “1880-களில் ஜார்ஜ் வாஷிங்டன் வில்லியம்ஸ் 1619 முதல் 1880 வரையிலான கறுப்ப்பினத்தவரின் வரலாறு என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டதுமுதல் பெரு முயற்சி.


ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குதலுக்கு உள்ளானதாலேயே ஆதிக்கம் செலுத்துவோரால் வரலாறு அற்றவர்களாகவும் ஒரு சமூகத்தின் பண்பாட்டுக்கோ அறிவுத் தளத்துக்கோ எவ்வித பங்காற்றாதவர்களாகவும் சித்தரிக்கப்படுவது வழமை. மெக்காலே பிரபு இந்தியர்களின் பண்பாட்டு பங்களிப்பை எள்ளி நகையாடியது இன்றும் இந்தியர்கள் பலருக்கு எரிச்சல் தருவது ஆனால் இந்தியர்களிடையே தீவிர சாதிய ஒடுக்குதலுக்கு உள்ளான தலித்துகள் பற்றியப் பார்வையும் அத்தகையானதாகவே இருந்தது.


இன்று பல தரப்பினரும் தாங்களே தலித்துகளின் முன்னேற்றத்துக்கு உழைத்ததாகவும், தாங்களே மீட்பர்கள் என்றும் பேசுவதோடலல்லாமல் தங்கள் பங்களிப்புகளை முதன்மைப் படுத்தும் விதமாக தலித்துகள் தற்சார்போ சுய முன்னெடுப்போ இல்லாமல் மீட்சிக்காக காத்திருந்ததுப் போல் சித்தரிக்கப்படுகின்றன. இந்த பின்னணியில் தான் தலித்துகளின் வரலாற்று மீட்டெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறதுபேராசிரியர் ஜெ. பாலசுப்ரமணியம்அச்சகங்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், அறிமுகமானதும் பெருவாரியாக மத நூல்களே முதலில் அச்சுக்கு வந்தன. காலப் போக்கில் காலனி ஆட்சிக் காலத்தில் சுதந்திர போராட்டத்தில் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றின. பத்திரிக்கைகள் வாயிலாக அறிவுச் செயல்பாடு முன் நகர்ந்த போது ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டம் ஒரு பக்கமும் இன்னொரு பக்கத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான செயல்பாடுகளும் தொடங்கின. அவ்வரலாற்றில் காலத்தின் தடத்தில் மறைந்துப் போனதால் மறக்கப்பட்ட தலித்துகளின் பங்களிப்பை பேராசிரியர் ஜெ. பாலசுப்ரமணியன் மூன்று முக்கிய நூல்களின் வாயிலாக மீட்டெடுத்து தமிழக வரலாற்றியலில் புதிய அத்தியாயத்தையே எழுதி இருக்கிறார் என்றால் மிகை இல்லை


பேராசிரியர் பாலசுப்ரமணியனின்சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள்: 1869-1943”, “பூலோகவியாஸன்: தலித் இதழ் தொகுப்பு”, “வழிகாட்டுவோன்நூல்களை முன் வைத்து தலித் இதழியல் வரலாற்று பற்றியும் அதனூடாக தெரியவரும் தலித் வரலாறு பற்றியும் இரண்டு வருடம் முன்பு ஒரு நேரலையை நிகழ்ச்சியை பேராசிரியர் பாலசுப்ரமணியம் மற்றும் பேராசிரியர் ரத்தினமாலா அவர்களுடன் நடத்திய போது எழுதிய குறிப்புகளைத் தொகுத்து இக்கட்டுரையை அளிக்கிறேன். இக்குறிப்புகளினூடாக பாலசுப்ரமணியமின் வரலாற்றுப் பணியின் தனித்துவத்தையும் பத்திரிக்கைச் செயல்பாடுகள் தலித்துகளின் அறிவுச் செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.


தமிழ் இதழியலும் சாதியும்:

தமிழ் நாட்டில் இதழியலின் ஆரம்பமே சாதிய நலன் சார்ந்தது தான். இந்திய இதழியலின் வரலாற்றில் தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும்தி இந்துபத்திரிக்கைக்கு மிகப் பிரதானமான இடமுண்டு. ஜவஹர்லால் நேருதி இந்துபத்திரிக்கையை மிகப் புகழ்ந்து கருத்து பதிவு செய்திருக்கிறார். 1878-இல் ஆரம்பிக்கப்பட்டதி இந்துசுய சாதி நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டதே. சர். முத்துஸ்வாமி ஐயரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோருவதற்கும் அவருக்கு எதிராக ஆங்கிலோ-இந்திய சென்னை பத்திரிக்கைகளின் பிரச்சாரத்தை முறியடிக்கவுமேதி இந்துபத்திரிக்கை பிராமணர்களால் துவக்கப்பட்டது. பத்திரிக்கைத் துறை அப்போது ஒவ்வொரு சமூகத்தின் நலனை முன்னெடுக்கும் கருவிகளாகவே பாவிக்கப்பட்டன.


1850-கள் தொடங்கி தமிழகத்தில் செல்வாக்குப் பெற்று வந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகளையும் அவர்களின் இந்து மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தையும் எதிர்ப்பதற்காகவே பத்திரிக்கைகள் தோற்றுவிக்கப்பட்டு இயங்கின என்றும் அவற்றின் நோக்கங்கள் அப்பத்திரிக்கைகளின் பெயர்களே சொல்லும் என்றும் ஆசிரியர் பட்டியலிடுகின்றார். “ஆரியஜனப் பிரியன் (1891), ஆரியஜன ரட்சினி (1891), ஆரியஜன பரிபாலினி (சென்னை, 1889)” போன்றவை அப்பத்திரிக்கைகளின் பெயர்கள். கவனிக்கவும், இதே காலத்தில் தான் கிறிஸ்தவ மிஷனரிகள் துவக்கிய கல்வி நிலையங்களுக்குப் போட்டியாக இந்து கல்வி நிலையங்களும் தோன்றின. இச்செய்திகள் அக்காலம் பற்றிய ஒரு சித்திரத்தை நமக்களிக்கிறது.


பிராமணர்களைப் போலவே வேறு சாதியனரும் பத்திரிக்கைகள் தொடங்கலாயினர். உதாரணங்கள், ‘நாடார்குல மித்திரன் (1919-1931), நாடார் நண்பன், சான்றோர்குல விவேக போதினி (கோவிந்தசாமி நாடார்), ஷத்திரியகுல மித்திரன் (துரைசாமி கிராமணி, 1919), விஜய விகடன் (கதிர்வேல் நாடார்) போன்றவை நாடார்களால் நடத்தப்பட்டன. “செட்டியார்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு ராமநாதன் செட்டியா என்பவ்ர வைசிய மித்திரனையும், வன்னியர்களுக்காக . சுப்பிரமணிய நாயகர் என்பவர் வன்னியகுல மித்திரனையும், விஸ்வகர்ம மக்களின் நலனுக்காக கே. கண்ணப்ப ஆசாரி என்பவர் விஸ்கர்ம குலோபகாரியையும் தொடங்கினர்”. இப்பத்திரிக்கைகளில் பெரும்பாலானவை சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கிய 1891- ஒட்டி ஆரம்பிக்கப்பட்டது தற்செயலல்ல என்று ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்


இந்த பின்னணியில் தலித்துகளின் இதழியல் பங்களிப்பை பொறுத்திப் பார்க்க முடியும்


சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: ஓர் அறிமுகம்


அதிகமாக நேரடி ஆவணங்கள் கிட்டாத ஒரு செயல்பாட்டினை வரலாற்றாசிரியனின் நேர்த்தியோடு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம். முதல் தலித் இதழ் 1869-இல் ஆரம்பிக்கப்பட்டதால் அவ்வருடத்தில் ஆரம்பிக்கும் வர.லாறு 1943-வரை மட்டுமே புத்தகத்தில் கருத்தில் கொள்ளப்படுவதற்கு காரணாம் 1944-இல் பெரியார் தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு முன்பான தலித் செயல்பாடுகளை பார்க்கும் நோக்கமே. திராவிட இயக்கத்துக்கு முன்பான அறிவுச் செயல்பாட்டை வலியுறுத்துவதன் மூலம் இன்று திராவிட இயக்கம் தங்களால் தான் தலித்துகள் முன்னேறினார்கள் என்று கட்டமைப்பதை இத்தொகுப்பு கேள்விக்குள்ளாக்குகிறது.

அறிவுத் தளத்தில் செயல்பட்ட தலித்துகள் முதரபாஷிதம், புலவர், பண்டிதர், நாவலர் போன்ற பட்டங்களைகொண்டிருந்தார்கள் என்பது வெறும் செய்தியல்ல


சாதிவாரி கணக்கெடுப்பால் நிகழ்ந்த சாதிய எழுச்சி, .சி.எஸ் பரீட்சையை இந்தியாவில் நடத்துவதற்கு எதிராக ரெட்டமலை சீனிவாசனின்பறையன்இதழ் நடத்திய அறிக்கைப் போர், தலித்துகளுக்கான தனிப் பள்ளி கோரிக்கைகள் ( அதே காலத்தில் நடந்த அமெரிக்க தனிப்பள்ளிகள் போல்), தலித் அடையாள உருவாக்கம், சீர்திருத்தம், மத நம்பிக்கைகளைக் கேள்விக் கேட்பது என்று அடிப்படை வாழ்வாதாரம் தாண்டி அநேக பேசுப் பொருள்களை தலித் இதழ்கள் பேசியிருப்பதாலேயே இதனை நாம்அறிவுச் செயல்பாடுஎனலாம்.


1909-இல்மது விலக்கு தூதன்என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “Temperance Herald” என்றும் இரு மொழிகளில் டி.மனுவேல் நடத்தியிருக்கிறார். இன்று மது விலக்கு என்றாலே காந்தியைத் தான் நினைக்கிறோம் ஆனால் இப்படி ஒரு பத்திரிக்கை தலித் ஆசிரியரால் நடத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் மது விலக்குக்கு ஆதரவாக சங்கமும் நடத்தியிருக்கிறார்கள். அச்சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் அயோத்திதாசர் தமிழில் உரையாற்ற, எஸ்.அஜீம் உதீன் சாயபு ஆங்கிலத்தில் உரையாற்றினாராம். “தருமதொனி (1932)” என்ற பத்திரிக்கையும் இரு மொழிகளில் வெளிவந்துள்ளது. இரு மொழிகளில் பத்திரிக்கை நடத்துவது பரவலாகவே இருந்திருக்கிறது


பத்திரிகை நடத்தியவர்களில் சிலர் சுவாரசியமான சாதிய பின்புலமுடையவர்கள். “ஜாதி பேதமற்றோன் (1922)” என்ற பத்திரிக்கையை கத்தோலிக்க சங்கம் ஒன்றின் சார்பில் டி.ஆதிநயினார் வெளியிட்டார், அவர் ஜைன சமயத்தை சார்ந்தவர். “சந்திரிகை (1932)” என்.கிருஷ்ணமூர்த்தி என்கிற பிராமணரை ஆசிரியராக கொண்டு மாசிலாமணி தேசிகர் என்கிற ஆதி திராவிடர் வெளியிட்டார். இராஜேந்திரம் பிள்ளை நடத்திய இரண்டு பத்திரிக்கைகளிலும் எஸ்.ஜி.ராமானுஜல நாயுடு துணை ஆசிரியராக பணியாற்றினார்.


திராவிடன்என்கிற சொல்லையே பிரதானமாக பயன்படுத்திய தலித் தலைவர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் 1916-இல் பிராமணரல்லாதோர் இயக்கம் தங்களை திராவிடர்கள் என்று குறிப்பிடத் தொடங்கிய பின்அதி திராவிடர்என்று மாற்றிக் கொள்கிறார்கள். 1907-இல்திராவிட கோகிலம்வெளிவருகிறது. அதன் பின் 1919-இல் வெளிவந்த தலைப்புகள் ஆதி திராவிடன் (கொழும்புவில் இருந்து வெளிவந்தது), மெட்ராஸ் ஆதி திராவிடன், ஆதி திராவிட பாதுகாவலன் (1927-31).


வெறும் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றங்களைத் தாண்டிய விஷயங்களை தலித் பத்திரிக்கள் பேசியதற்கு உதாரணம் 1872-இல் சுவாமி அரங்கையாதாஸால் தொடங்கபட்டசுகிர்தவசனி”. “மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தங்களைஇப்பத்திரிக்கை பேசியிருக்கிறது. வள்ளலாரின்தெய்வீக சக்தியை ஒரு கட்டுரையே எழுதி மறுத்திருக்கிறார்கள்.


பா...இராஜேந்திரம் பிள்ளை நிறுவியமஹாவிகடதூதன்” 1886-1927 வரை வெளிவந்துள்ளது. 1893-இல் இப்பத்திரிக்கை 1500 பிரதிகள் விற்றிருக்கிறது. அது அக்காலத்துக்கு பெரும் சாதனை. முதல் உலகப் போர் நடந்த போது இப்பத்திரிக்கை போர்ச்செய்திகள் என்று தனிப்பத்தியே நடத்தியிருக்கிறது. ஒரு சமூகத்தில் அறிவுச் செயல்பாடு நிகழ்ந்திருக்கிறது / நிகழ்கிறது என்பதற்கு அடிப்படை தேவைகள் தாண்டிய பேசுப் பொருள்கள் (அது நடந்தால் தான் என்பதல்ல பொருள்) முக்கியம், அதே போல் முக்கியத்துவம் கருத்தியல் ரீதியான உட் பூசல்களும். மஹாவிகடதூதன் ஜான் ரத்தினம் நடத்தியதிராவிட பாண்டியன்இதழ், ரெட்டமலை சீனிவாசன் நடத்தியபறையன்இதழ்களொடு கருத்தியல் மோதல்களை முன்னெடுத்திருக்கிறது. “பறையன்இதழும் அயோத்திதாசரின்தமிழன்இதழுமே கூட முரன்பட்டிருக்கின்றன.


தலித் இதழ்கள் குறித்து பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் விமர்சனம் அவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது. அது மேம்போக்காக பார்த்தால் உண்மை தான். “விடுதலைஎன்பது தேச விடுதலை மட்டுமல்ல. தேச விடுதலையை ஒரு சாரார் முன்னெடுத்தார்கள் இன்னொரு சாரார் சமூக விடுதலையை முன்னெடுத்தார்கள் என்பதே உண்மை.


பூலோகவியாஸன் அளிக்கும் சித்திரம்:


தலித் இதழியலின் வரலாறு ஏன் முக்கியமானதென்றால் இதன் மூலமே நாம் தலித்துகள், காந்திய அல்லது திராவிட இயக்கங்களின் தோற்றத்துக்கு முன்பே, முன்னெடுத்த சமூக-அரசியல் முன்னெடுப்புகளை அறிந்துக் கொள்ள முடிகிறது.

பூஞ்சோலை முத்துவீர நாவலரால் 1903-1917 வரை நடத்தப்பட்ட பூலோகவியாஸன் இதழின் 1909-வருடத்துக்கான சில இதழ்கள் கிடைக்கப்பெற்று அதனடிப்படையில் ஜெ.பாலசுப்பிரமணியம் எழுதியதுபூலோகவியாஸன்: தலித் இதழ் தொகுப்பு”.


பொருளும் பொருளாளிகளும்என்ற ஏப்ரல் 1909 கட்டுரை செல்வத்தின் நிலையாமைக் குறித்த ஜைன முனிவர் பாடலொன்றை மேற்கோள் காட்டி செல்வம் சேர்ப்போரை நல் வழியில் சம்பாத்திப்பவர்கள், தீய வழிகளில் சம்பாதிப்பவர்கள் என்று வகைப் படுத்தி அவர்களுள்ளும் சேர்த்த செல்வத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை வகைப்படுத்தும் அருமையான கட்டுரை இப்பத்திரிக்கைகள் வெறும் அன்றாட பிழைப்புச் சார்ந்த கோரிக்கைகளைத் தாண்டி தத்துவார்த்த விசாரணையிலும் ஈடுபட்டன என்று சொல்கிறது. அதே வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு கட்டுரைஅத்வைத நிரூபணம்”. கட்டுரையின் உபதலைப்பு, “விஷ்டாத்வைத வெற்றியின் மறுப்பு”. “உங்கள் மதம் ஆராய்ச்சி மதமா, நம்பிக்கை மதமா?’ எனக் கேள்விக்கேட்டு மிக சுவாரசியமாக எழுதப்பட்ட தத்துவார்த்தமான கட்டுரை


தலித் இதழ்கள் நிச்சயமாக ஆங்கிலேய அரசை வெகுவாகப் புகழ்ந்தே எழுதிகின்றன. சுதேசிக் கப்பல் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டு வாழ்த்தும் போதும் அம்முயற்சி அரசுக்கு எதிராக மாறக் கூடாதென்றே வாழ்த்துகின்றது பத்திரிக்கை (டிசம்பர் 1909)


பூலோகவியாஸன் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவை சிலாகித்து பாராட்டுகிறது. அதே வாரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியாவை சூறையாடிவிட்டார் என்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் எட்மண்ட் பர்க் (Edmund Burke). பர்க்கின் ஆங்கில உரைகள் இலக்கிய உலகில் பிரசித்தம். பாராளுமன்றத்தில் அவ்வழக்கு தோல்வியுற்றது. ஹேஸ்டிங்க்ஸின் ஆட்சிக் காலத்தில் தான் முதன் முதலாக கீதை மொழிப் பெயர்க்கப்பட்டது அதற்கு நல்ல முன்னுரையும் ஹேஸ்டிங்க்ஸ் எழுதினார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சு புரட்சியை எதிர்த்திருக்கிறார். ஆக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் பல முரண்களை கொண்டிருந்திருக்கிறார்கள்.


தலித் அல்லாதோரும் இப்பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள். “பிராமண விதவைகளின் கஷ்ட விமோசன சாதகம்என்ற கட்டுரை சி.வி.பாஸ்கரன் என்பவர் எழுதியிருக்கிறார். “தமிழ் மாதுஎன்ற பத்திரிக்கை நடத்திய எஸ்.ஸவப்பநேஸ்வரி அம்மாள், “இளவயதில் கலியாணம் செய்தல்என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார், இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.


பூலோகவியாஸனும் பாரதியும் காங்கிரஸ் மாநாடும்:


டிசம்பர் 28-30 1908-இல் சென்னையில் காங்கிரஸ் ஒரு மாநாடு நடத்தியது பற்றி பூலோகவியாஸன் "1908ஆம் வருடத்திய இந்தியன் நாஷனல் காங்கிரஸ், சென்னை" என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை ஜனவரி 1909-இல் வெளியிட்டிருக்கிறது.


புலோகவியாஸனின் கட்டுரையில் மாத இதழான பூலோகவியாஸனை விட நாளிதழ்கள் அதிகம் அம்மாநாடு பற்றி எழுதியதை ஏற்கனவே வாசகர்கள் படித்திருக்கலாம் என்று சொல்லி சிறு குறிப்பு மட்டுமே அம்மாநாடு பற்றி வெளியாகி இருக்கிறது. அக்குறிப்பில் "இப்பெருங்கூட்டம்" என்று மாநாடு பற்றி சொல்கிறது, தலைமை வகித்த ராஷ்விஹாரி கோஷை "கிழச்சிங்கம்" என்று குறிப்பிட்டு மாநாடு இனிதே நடந்ததாகச் சொல்கிறது. மாநாட்டில் மார்லியின் சீர் திருத்தம் ஏற்கப்பட்டதையும், இராணுவத்தில் இந்தியர்களுக்கான இடம், "தேச பிரஷ்டம் செய்யும் ரெகுலேஷனை ரத்து செய்தல்" முதலிய தீர்மணங்கள் அடங்கிய 21 தீர்மானங்கள் நிறைவேறியதாகவும் அதற்கு முந்தைய வருடத்தில் நடந்ததைப் போல் "அயோக்கிய காரியங்கள்" நடக்கவில்லையென்றும் கட்டுரை சொல்க்கிறது


இப்படி ஒரு நிகழ்வுப் பற்றி பாரதி எழுதாமலிருப்பானா என்ற உந்துதலோடு பாரதி தொகுப்பைப் புரட்டினேன். சிக்கியது கட்டுரை. ஜனவரி 2 1909-இல் இந்தியா பத்திரிக்கையில், "சென்னைப்பட்டணத்தில் ஆட்டு மந்தை" என்ற தலைப்பில் தாளித்து எடுத்திருக்கிறான்.


1905, 1906, 1907 காங்கரஸ் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடப்பட்டதென்றும் இம்மாநாட்டில் பாடவில்லை என்றும் கொதிக்கிறான் பாரதி. "1908-ம் வருஷத்துச் சென்னைத் துரோகக் கூட்டத்தில், நமது ஜாதீய மஹாகீதத்தை மறந்து விட்டார்கள். ஜாதிக்கெட்ட மிலேச்சர்கள் சேர்ந்த அந்தச் சபையிலே ஏதோ ஒரு அன்னிய பாஷையிலே ஒரு பாட்டுப் பாடினார்கள்


ராஷ்விஹாரி கோஷை திட்டித் தீர்க்கிறான் பாரதி. அவர் உரையில் மார்லியின் சீர்திருத்தத்தை ஏற்றதை கிண்டலடிக்கிறான், அரசாங்க அடக்கு முறையை சரியாக கண்டிக்கவில்லை என்று ஏசுகிறான், கடைசியாக அவர் உரை "உண்மையிற் சுருங்கியது; தேசாபிமானத்தில் சுருங்கியது; அறிவுத் திறமையில் சுருங்கியது; ஸகலத்திலும் சுருங்கியது. ஆனால் நடிப்பு ராஜபக்தியிலும், தேசத் துரோகத்திலும் வெகு விசாலமானது" என்கிறான். கோஷ் மிதவாத-தீவிரவாத காங்கிரஸ் உறுப்பினர்களிடையேயான பிளவை இன்னும் தீவிரமாக்கியதையும் அவரை விட அநேக காலம் தொண்டாற்றியவர்கள தூஷித்ததையும் பாரதி கண்டிக்கிறான். வேறு பத்திரிக்கைகளும் கோஷின் அப்போக்கைக் கண்டித்திருக்கின்றன

மேலும் ராஸ்விஹாரியை அவர் பணத்துக்காகவே சுரேந்திரநாத் பானர்ஜி கட்சியில் சேர்த்தார் என்கிறான் பாரதி. மாநாடு கூட்டம் பற்றி, "ஆறேமுக்கால் மனிதர்களைக் கொண்டு" நடந்த கூட்டம் என்று கிண்டலடிக்கிறான். (மற்ற பத்திரிக்கையாளர்களும் பாரதியின் கருத்தை ஒட்டியே கோஷை விமர்சித்து எழுதினார்கள் என்று சில எடுத்துக் காட்டுகளை சீனி விஸ்வநாதன் கொடுத்திருக்கிறார்)


பூலோகவியாஸன் கட்டுரையாளர் தெளிவாக தன் குறிப்பு ஒரு சாரம்சம் என்கிற அளவில் தான் என்கிறார். அவர் குறிப்பிட்டதைப் போலவே வேறு பத்திரிக்கைகள், ‘இந்தியா', 'சுதேசமித்திரன்','இந்து', 'ஆந்திர கேசரி' போன்றவை விரிவாக எழுதியிருக்கின்றனஒரே காலத்தில் இவ்விரு பார்வைகளும் சுவாரசியமானவை. தேசத்தின் முக்கிய நிகழ்வுகளை இது வரை பரவலாக அறியப்படாத ஒரு தலித் இதழும் பாரதியும் ஒரு சேர எழுதியிருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தி.


வழிகாட்டுவோன்


அரிஜன சேவா சங்கம்”, திராவிட இயக்கம் இவற்றுக்கெல்லாம் முன்பாகவே தலித்துகள் சுய முன்னேற்றத்துக்கு சங்கங்கள் தோற்றுவித்து அச்சங்கங்களின் குரலாக பத்திரிக்கைகளும் நடத்தி இருக்கிறார்கள். அப்படி ஒரு பத்திரிக்கை தான் 1918-இல் துவங்கப்பட்டவழிகாட்டுவோன்”.

விருதுபட்டியில் (விருநகர்) மே மாதம் 21-ஆம் தேதி 1915-இல் ஆரம்பிக்கப்பட்டதென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்என்று தமிழிலும், ஆங்கிலத்தில் “South India Oppressed Classes Union” என்ற பெயரிலும் சங்கம் தொடங்கி நாளடைவில் 49-கிளைகள் தொடங்கி அதன் பின் தங்கள் குரலாக ஒரு பத்திரிக்கை வேண்டுமென்று 1918-இல்வழிகாட்டுவோன்தொடங்கினார்கள்.


பிப்ரவரி 1918 சில மாதங்கள் முன் மாண்டேகு பிரபுவுக்கு அனுப்பிய மகஜரை பத்திரிக்கையில் வெளியிட்டார்கள். 6 பக்க மகஜர் அபாரமான கோரிக்கைகள் அடங்கியது. 1909-இலேயேமது விலக்கு தூதன்என்றொரு பத்திரிக்கை வெளிவந்ததையும் மது விலக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதையும் நேற்று எழுதினேன். இந்த 1917-இல் சமர்பிக்கப்பட்ட மகஜரிலும்மதுபானம் (liquor traffic)” என்ற பகுதியில், கள்ளு மற்றும் மதுபான கடைகள் மூடச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். காந்தியோ, ராஜாஜியோ இக்கோரிக்கைகளை வைக்கும் முன்பே நடந்தது இது


ஜீவனார்த்தம் (Economic Condition)” என்ற பகுதியில் தலித் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் கூலி வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லை என்றும் அக்கூலிமுன்னூறு வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதென்பதை கவர்மெண்டார் கவனித்திருக்கலாம்”. வில்வைவாசி உயர்வை கூலி பிரதிபலிக்கவில்லை என்று 1918-இல் சொன்னதை தான் 81 வருடம் கழித்து மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களும் சொன்னார்கள்.


கல்வி (Education)” பகுதியில் கட்டாயக் கல்வி என்று சட்டம் கொண்டு வந்தால் தான் கல்வியின் தேவையறியாதவர்கள் கூட கல்விக் கற்க பிள்ளைகளை அனுப்புவார்கள் என்று மிக முக்கிய கோரிக்கை வைக்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு வேறு யார் வந்து என்ன சொல்லிக் கொடுக்கத் தேவையிருந்தது என்று புரியவில்லை


அரசு வேலையில் பிரதிநிகள் வேண்டுமென்று கேட்கிறார்கள். முக்கியமாக பத்திரப் பதிவுகளில் எழுதப் படிக்கத்தெரியாத தங்கள் சமூகத்தினர் ஏமாற்றப்படுவதால் தங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் சாட்சி கையெழுத்து இருந்தால் தான் பத்திரம் செல்லுபடியாகும் என்று சட்டம் கேட்கிறார்கள்.

1918-
இலேயே, அநேகமாக அயோத்திதாசரின் பாதிப்பாக இருக்கலாம், திருவள்ளுவரையும், ஔவையையும்தம் குலத்தவர்என்கிறார்கள்விவசாயம்என்ற கட்டுரை நிலம், நீர், உரமிடுதல் ஆகியவற்றின் தன்மைகளைப் பேசுகிறது. புதிதாக கோவையில் தொடங்கப்பட்ட (1906-ஈல்) வேளாண் கல்லூரி பற்றியும் அக்கல்லூரி நிபுணர்கள் மூலம் அறிய வரும் பயிர்கள், பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பற்றியும் அறிய நேர்ந்ததை நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். இவர்கள் யாரும்இயற்கை வேளாண்மை”, “மரபே பெரிதுஎன்றெல்லாம் பேசவில்லை


வழிகாட்டுவோன்சுய சாதி விமர்சனமும் செய்கிறது. “ஏமாளியில்லாமல் ஏய்க்கிறவனில்லைஎன்று சொல்லிசண்டாளர்களென்றும், பஞ்சமர்களென்றும், தீண்டா ஜாதிகளென்றும் இதர ஜாதிகளாகிய மெய்சண்டாளர் சொல்லி வருவதற்கு இவர்களுடைய தரித்திர நிலமையே காரணம்என்று ஒரு கட்டுரை சாடுகிறது.


தென் இந்தியா ஒடுக்கப்பட்டவர்களின் ஐக்கிய சங்கம்ஒரு கூட்டுறவு நிதியுதவி மையமும் நடத்தியிருக்கிறார்கள். “வழிகாட்டுவோன்தஞ்சை பகுதிகளில் அடிமை பத்திரங்கள் இருந்ததையும் அதில் குடும்பத்தையே அடிமைகளாக எழுதி வாங்கும் வழக்கமிருந்ததையும் குறிப்பிடுகிறது. அந்நிலை நீங்கத்தான் தாங்களே நிதியுதவி வழங்க முன்னெடுத்தார்கள்

 

ஜெ.பாலசுப்பிரமணியமின் இந்நூல்கள் மிக முக்கியமான வரலாற்று தரவுகள். நம் வரலாற்று புரிதலை மொத்தமாக கலைத்து வேறு தளத்துக்கு இந்நூல்கள் கொண்டு செல்கின்றன.


ஒரு பண்பாட்டு அறிவியக்கத்தின் சுவடுகள்


ஒரு நல்ல வரலாற்றெழுத்து வெறும் தகவல்களின் தொகுப்பல்ல. தகவல்களின் அடிப்படையில் ஒரு காலக்கட்டத்தை அதன் ஊடும் பாவுமான சித்திரத்தை வாசகனுக்கு அளிக்க வேண்டும், உள் முரண்கள் உட்பட. மேலும் ஒரு ஒற்றைப் படையான சித்திரத்தை, ஏதேனும் ஒரு காரணம் தொட்டு, உருவாக்கும் செயற்கையான நிர்பந்தத்துக்குள் அகப்படாமல் தரவுகள் எங்கு இட்டுச் செல்லுமோ அதன் வழியில் போய் அந்த தரவுகளையும் கேள்விக் கேட்பதே நல்ல வரலாற்றாசிரியர் செய்யக் கூடியது. அவ்வகையில் இன்று தமிழகத்தில் மிளிர்பவர்களில் நிச்சயம் ஸ்டாலின் ராஜாங்கமும் ஜெ. பாலசுப்ரமணியமும் முதன்மையானவர்கள்


சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை: தலித் இதழ்கள்மேலே சொன்ன வரலாற்றெழுத்துக்கு சிறந்த உதாரணம். ‘மஹாவிகடதூதன்பத்திரிக்கை பற்றிய குறிப்புகளுடன் நின்று விடாமல் அதன் ஆசிரியர் இராஜேந்திரம் பிள்ளை இயற்றிய நூல்கள் பட்டியலை அளித்தி அந்நூல்களின் விற்பனைக்கான விளம்பரத்தின் விபரங்களையும் ஆசிரியர் சேர்த்திருப்பது கூடுதல் சுவை மட்டுமல்ல, சுவடே இல்லாமல் மறைந்து போன ஒரு காலத்தின் சித்திரம். இராஜேந்திரம் பிள்ளை தன் புத்தகம் பற்றிய விளம்பரத்தில்புஸ்தகம் உயர்ந்த கிளேஸ் காகிதத்தில் 8 பேஜ் ஸைசில் அச்சிட்டு அழகாக பயிண்டு செய்திருக்கிறது, விலை ரூபா 1” என்கிறார். இப்பத்திரிக்கை வெளிவந்த காலத்தில் தான் பாரதியும் தன் நூல்கள் அச்சாகும் போது தரமான தாள்களில் அச்சிடப்பட வேண்டுமென்று தீரா ஆசையுடன் கடிதமெழுதியிருக்கிறான்


வரலாற்றெழுத்தின் போதாமைகளோடு வரலாற்று வாசிப்பின் போதாமைகளும் சம காலத்தில் போட்டி போடுகின்றன. வரலாற்றாளுமைகள் அவர்கள் காலத்தில் ஒருவருடன் ஒருவர் முரண்பட்டதை இன்று அவரவர் வசதிக்கு ஏற்பவும் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளுக்கு உதவியாகவும் பலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் போராட்டங்களில் பலத் தரப்பட்ட ஆளுமைகள் தத்துவார்த்தமாகவோ தந்திரோபாயமாகவோ தங்களுக்குள் முரண்படுவதை சம காலத்திலேயே ஆதிக்க சக்திகள் பயன்படுத்திக் கொள்வர், அந்த வரலாற்றை எழுதும் ஆசிரியரும் வாசிக்கும் வாசகனும் அம்முரண்களை நுண்ணுனர்வோடு அனுக வேண்டும். எந்த அறிவியக்கத்திலும் உள்