Saturday, December 2, 2023

பேரறிவாளன் விடுதலை: தமிழகத்தின் கும்பல் மனநிலைக்கு சில கேள்விகள்


கடந்த ஒரு வாரமாக (30 மே, 2022) தமிழகமே திருவிழாக் கோலம் பூண்டு ஒரு கொண்டாட்ட மன நிலையில் இருப்பதுப் போல் தோன்றுகிறது. இந்தியாவின் நீதிமன்றங்களும் விசாரணை அமைப்புகளும் அதிகார மையங்களும் ஒரு சாதாரணரை அநீதியின் சங்கிலிகளால் பிணைத்து கடைசியில் ஒரு தாயின் கண்ணீரின் முன் தோற்று விடுவித்தது என்று மாநிலமே நீதி, தாமதமாகவேனும், நிலைத்ததென்று கழிப் பேருவகைக் கொண்டதுப் போல் தோன்றினால் பிழையல்ல. பத்திரிக்கைகளும், பத்திரிக்கையாளர்களும், ஊடகங்களும் ஒருவரோடு ஒருவர் போட்டிப் போட்டு தலையங்கங்கள், பேட்டிகள் என்று பேரறிவாளனை கொண்டாடுகின்றன. முத்தாய்ப்பாக மாநில முதல்வர் முதல் சிலரைத் தவிர தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளையும் பேரறிவாளன் சந்திக்கிறார், அவர்களால் ஆரத் தழுவப்படுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்து யாரேனும் பார்த்தால் பேரறிவாளன் சம காலத்தில் தோன்றிய மாபெரும் நெல்சன் மண்டேலா என்று நினைக்கலாம். இது தொடர்பாக ஒரு மாற்று தரப்பின் சில கருத்துகளை முன் வைக்க இக்கட்டுரை மூலமாக முயல்கிறேன்

யாருக்காக இக்கட்டுரை:


இன்று பேரறிவாளனின் விடுதலை கொண்டாட்டங்களில் பங்கெடுக்காதவரைதமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை எண்ண ஒட்டத்துக்கு எதிராக நிற்கும் மக்கள் விரோதிகள்என்று சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. அப்படியாயின் இக்கட்டுரை யாருக்கானது?


வெகுஜன அபிப்பிராயம் ஒரு திசையில் ஊழி வெள்ளமாகத் திரள்கிறது என்பதாலேயே அதுவே சரியென்றோ அதற்கு மாற்றாக ஒரு சன்னமான குரலும் இருக்கக் கூடாதென்று சொல்வதையோ ஏற்க முடியாது. இவ்விடத்தில் அண்ணாதுரையின் இரங்கல் கூட்டத்தில் ஒலித்த ஜெயகாந்தனின் குரல் நினைவுக்கு வருகிறது. அவர் உரையை அநாகரீகமென்று ஒரு வாசகன் ஒதுக்கலாம் ஆனால் அவர் அவ்வுரையை நிகழ்த்தியிருக்கவே கூடாதென்று சொல்ல முடியுமா? அந்த உரை யாருக்கானது என்று அவர் தெளிவுறச் சொல்கிறார். அதுவே இக்கட்டுரைக்கும் பொருந்தும்

கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது…..கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது.”


பேரறிவாளனின் விடுதலையை ராஜிவ் கொலை, ராஜீவுடன் இறந்த மற்றவர்கள் ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து உணர்ச்சித் தளத்தில் நின்று அனுகக் கூடாது, நிதானமாக நீதி பரிபாலனம், விசாரணை தவறுகள், தண்டனை, கருணை ஆகியவைப் பற்றி சற்றே சலனங்களிலிருந்து விலகி விவாதிக்க வேண்டும் என்கிறார்கள். நல்லது. ஆனால் அதேப் போல் அவர்கள் எதிர் தரப்பு இக்கொண்டாட்டங்கள் குறித்து எழுப்பும் மாற்றுக் கருத்துக்கும் சற்றே செவி சாய்க்கலாமே? அப்படியானவர்களுக்கு தான் இக்கட்டுரை. அது ஏற்புடையதல்ல என்றால் இங்கேயே வாசகர் நிறுத்திக் கொண்டு கடந்துப் போகலாம்


இக்கட்டுரையில் ஒட்டு மொத்த ஈழப் பிரச்சனைக் குறித்தோ, பிரபாகரன் குறித்தோ, ராஜீவின் அரசியல் செயல்பாடுகள், இந்திய-இலங்கை ஒப்பந்தம், ராஜீவின் கொலையின் சதி வலைகள் ஆகியனப் பற்றியோ நீண்ட விவாதமெல்லாம் எழுத எண்ணமில்லை. தேவையான அளவே அவற்றைத் தொட்டுச் செல்வேன்


விடுதலைப் பற்றிய என் கருத்து


நான் சாதாரண பார்வையாளன், ஒரு சராசரி உலகப் பிரஜை அவ்வளவே. இக்கட்டுரையை எழுத முனைந்தவன் என்கிற முறையில் என் தரப்பை வெளிப்படுத்த கடமை இருப்பதாலேயே என் கருத்தை வாசகருக்குச் சொல்கிறேன்


மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை 11 வருடங்கள் எந்த பதிலும் இல்லாமல் கிடப்பில் போட்டிருந்தது அக்கிரமம். அதனையே காரணமாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தண்டனை குறைப்புச் செய்தது. ஆயுள் தண்டனை என்று மரண தண்டனையைக் குறைத்ததுமே எத்தனை ஆண்டுகள், ஏற்கனவே இருந்த ஆண்டுகளோடு, சிறையில் இருக்க வேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அப்போதே அவர்கள், எழுவரும், 14-15 ஆண்டுகள், 1999 மரண தண்டனை தீர்ப்புக்குப் பின், சிறையில் இருந்திருந்தார்கள்


ஆயுள் தண்டனை ஆயுளுக்குமான தண்டனையா என்று விவாதிக்கலாம். இந்தியாவில் அப்படியான வழக்கமில்லை. கம்யூனிஸ்ட் லீலாவதி கொலை வழக்கு, மேலவளவு கொலை வழக்கு, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு மூன்றும் மிகக் கொடூரமான கொலைகளைப் பற்றியது. மூன்றிலுமே திமுக, அதிமுக அரசுகள் சில பிறந்த நாள் விழாக்களை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை சீக்கிரமாகவே விடுவித்திருக்கிறார்கள்


ஆயுள் தண்டனை குறைப்புப் பெற்ற பேரறிவாளன் அதன் பிறகு 8 ஆண்டுகள் சட்டப் போராட்டதின் பின் தற்போது விடுதலையாகி இருக்கிறார். அவர் பங்களிப்பின் தீவிரம் எப்போதும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் விடுதலையானதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. என் விவாதமெல்லாம் அவரை நேரடியாக நிரபராதி என்று வாதிடுபவர்களோடுமல்ல, மாறாக மறைமுகமாக அவர் நிரபராதி என்றும் அவர் பங்களிப்பிற்கு அவர் என்றோ ஒரு சிறு குற்றம் புரிந்தவர் போல் விடுதலையாகி இருக்க வேண்டுமென்றும் இன்றைய கொண்டாட்டங்களை நியாயப்படுத்துகிறவர்களோடு  தான்


பேரறிவாளனின் பங்கு:


தமிழகத்தில் பெரும்பாலோர், கடந்த வார கொண்டாட்டங்களை ஏற்காதவர் உட்பட, பேரறிவாளன் குற்றமற்றவர் என்றோ பதின்ம பருவத்தில், 18 வயதில், சதியின் முழுப் பரிமாணம் தெரியாமல் சுழலில் சிக்கிய இளந்தளிர் என்றோ எண்ணுகிறார்கள். அதனால் தான் அவர் விடுதலையும் அதற்காகவே உழைத்த தாயின் கண்ணீரும் கனிவுடன் ஏற்கிறார்கள். மேலும் ராஜீவ் கொலையுடன் நேரடித் தொடர்புடையவர்கள் - தனு, சிவராச, சுபா, ஹரிபாபு - கொல்லப்பட்டு விட்டார்கள், எஞ்சியவர்கள் நேரடித் தொடர்பு அற்றவர்கள், சதியின் வீச்சரியாத பங்கேற்பாளர்கள் அல்லது நிரபராதிகள் என்று கடந்த பல வருடங்களாக பொதுப் புரிதலில் உறைந்து விட்டது. அது ஒரு பெரும் பிரச்சாரத்தின் விளைவே.


அருஞ்சொல்பத்திரிக்கையில் எழுதிய முன்னாள் நீதிபதி சந்துரு, “அக்கொலையில் சம்பந்தப்பட்ட நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்பார்வையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள். பின்னர் தடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் இந்தக் கொலையில் நேரடிப் பங்கு வகித்தவர்கள் அல்லர்என்கிறார். அத்தகைய கூற்றின் நோக்கம் மிகச் சாதாரணர் ஒருவர் அதீதமான தண்டனையை அனுபவித்தப் பின் விடுதலையாகி இருக்கிறார் என்று வாசகனை நினைக்க வைப்பது


நேரடித் தொடர்புஎன்பது நீதிமன்றத்தில் சட்ட விவாதங்களில் மிகக் குறுகலாகவே நிறுவப்படும். நளினியையும், முருகனையும் நேரடித் தொடர்பற்றவர்கள் என்று பொதுவில் சொல்ல இயலுமா


பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுச் செய்த தியாகராஜன் பேட்டரி எதற்காக வாங்கப்பட்டதென தனக்குத் தெரியாதென்று பேரறிவாளன் சொன்னதைப் பதிவுச் செய்யவில்லை, அப்படிச் செய்திருந்தால் அவருக்கும் ராஜிவ் கொலைக்குமான தொடர்பை நிறுவ முடியாது என்று தானாக முடிவுச் செய்து அந்த சில வார்த்தைகளை விட்டு விட்டதாக ஒரு பேட்டியில் சொல்லப் போய் சூறாவளி அடித்தது. இன்றும் எல்லா விவாதங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டு அதனாலேயே பேரறிவாளன் நிரபராதி இல்லையெனினும் ராஜீவ் கொலையில் அவர் பங்கு மிக மெலிது அதற்கான தண்டனையை அவர் அதீதமாகவே அனுபவித்து விட்டார் என்று பலர் நினைக்கிறார்கள்


தியாகராஜனின் அந்த பேட்டியையும் அதனை அவர் ஒரு தாக்கீதாகவே நீதிமன்றத்துக்கு கொடுத்ததையும் வைத்தே பேரறிவாளன் தன்னை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை திரும்ப பெற்றுக் கொள்ள 2018-இல் வழக்குத் தொடர்ந்தார். அவர் கூற்றை மறுத்த சிபிஐ அவர் சதி திட்டத்தில் உள்ளார்ந்த பங்காற்றினார் என்றது. பேட்டரி வாங்கியதோடல்லாமல் ஒரு வயர்லெஸ் கருவி செய்வதற்கும் கொலைக்குப் பின்னர் தடயங்களை அழிக்க முற்பட்டதையும் சிபிஐ சுட்டிக் காட்டியது. வழக்கில் தீர்ப்பு சொன்னது அதி முக்கியம்.


வழக்கின் எல்லா தரவுகளையும் சூழலையும் பார்த்தோமானால் பேரறிவாளன் எலக்டிரானிக்ஸ் பொறியாளர், பேட்டரி எதற்கு பயன்படுமென்று அறிந்தவர், வேலூர் கோட்டை மீது தாக்குதல் நடத்த முயன்ற சதி திட்டத்தில் பங்காற்றியவர், எல்டிடிஈ உறுப்பினர் என்று ஒப்புக் கொண்டவர், ஒருவரை நோக்கி வெறுப்புக் கொண்டவர். இதையெல்லாம் வைத்து இந்த கோர்ட்டே ஒரு முடிவுக்கு வர இயலாதா?” என்று கேட்டு பேரறிவாளனின் வழக்கை தள்ளுபடி செய்தது. (இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் குறிப்பில் இருந்து இப்பத்தி எடுக்கப்பட்டது). 


ஒரு முன்னாள் பிரதமரான ராஜீவைக் கொல்வதற்கு முன் இரண்டு ஒத்திகைகள் பார்க்கப்பட்டன. ஒன்று, ஏப்ரல் 1991-இல் ஜெயலலிதாவும் ராஜீவும் பங்கெடுத்த தேர்தல் கூட்டத்திற்கு மற்ற சதிகாரர்களுடன் பேரறிவாளனும் சென்றிருந்தார். அடுத்தது, வி.பி.சிங் பங்கெடுத்த கூட்டத்தில் ஒரு முன்னாள் பிரதமரை எவ்வளவு நெருங்க முடியுமென்று நளினி, முருகன், தனுவோடு பேரறிவாளனும் பங்கெடுத்த ஒத்திகை. ஒரு முன்னாள் பிரதமரின் கூட்டத்தில் ஒத்திகை பார்க்கும் உடனிருந்தவருக்கு தெரியாதா உண்மையான குறி எத்தகையவருக்கு என்று


இன்று பேரறிவாளனும் அவரோடு தொடர்புடையவர்களும் பல ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுக்கிறார்கள். எல்லா பேட்டியிலும் அவர் நிரபராதி என்று சொல்லப்படுவதை பேட்டி எடுக்கும் ஊடகவியலாளர்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஆமோதித்துக் கேட்டுக் கொள்கிறார்கள். ஒருவராவது, “சார் உச்ச நீதிமன்றம் உங்களை நிரபராதி என்று சொல்லவேயில்லையேஎன்று கேட்பதில்லை


ராஜீவ் கொலை தீவிரவாதமா?


நீதிபதி சந்துரு  அருஞ்சொல் கட்டுரையில் ராஜீவ் கொலை தடா ஷரத்துகளின் படி தீவிரவாத செயலல்ல என்று தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டி தற்போது பேரறிவாளனை விடுதலை செய்தது, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சொல்வதுப் போல், தீவிரவாதத்தை ஊக்குவிக்காது ஏனென்றால் அந்த கொலையே தீவிரவாதமல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதென்கிறார்


1999-இல் உச்ச நீதிமன்றம் தடாவில் தீவிரவாத செயலுக்கு கொடுக்கப்பட்டிருந்த வரையறையின் கீழ் ராஜீவின் கொலை தீவிரவாதமல்ல என்று ஒப்புக் கொண்டது. தடா சட்டத்தின் படி ஒரு அரசாங்கத்தையே செயலற்றுப் போக (overawe) கூடிய செயலை குற்றவாளிகள் செய்யவில்லை என்று குற்றவாளிகளின் தரப்பை ஏற்றது. காரணம், ராஜீவ் ஒரு முன்னாள் பிரதமர், மேலும் வேறு எந்த அரசமைப்பு சார்ந்தவைகள் மீது குற்றவாளிகள் தாக்குதல்கள் நடத்தவில்லை என்றது உச்ச நீதி மன்றம். இத்தீர்ப்பே விவாதத்துக்குறியது ஆயினும் தீர்ப்பு தீர்ப்பு தான்


எந்த சட்டத்தின் ஷரத்துகளின் மீது குற்றவாளிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டதோ அதன் நுட்பமான விளக்கத்தின்பாற் பட்டது அத்தீர்ப்பு. ஒரு முன்னாள் பிரதமரை, அவர் மீண்டும் பிரதமர் ஆகக் கூடும் என்று அஞ்சி அவரை கொன்றது தீவிரவாதமேயில்லை என்பதல்ல அத்தீர்ப்பின் அர்த்தம். நீதிமன்றத்தில் சட்ட நுணுக்கங்களின் மீது வழக்கு நடத்தி அதன் மீது கிடைக்கும் தீர்ப்புகளையும் நாம் அந்த நுட்பத்துடன் தான் பொது வெளியில் வைக்க வேண்டும். சராசரி இந்திய பிரஜை என்றல்ல எந்த நாட்டின் பிரஜையும் ஒரு முன்னாள் பிரதமரை கொல்வது தீவிரவாதமென்றே கருதுவர்


முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை, ஈராக் யுத்தத்திற்காக, கொலைச் செய்ய இருந்த சதியை அமெரிக்கா இன்று முறியடித்திருக்கிறது. அப்படி ஒரு கொலை நடந்திருந்தால் அமெரிக்கா அதனை தீவிரவாதமாகவே பார்த்திருக்கும். ராஜீவ் கொலை, பொது பார்வையில், கொடூரமான தீவிரவாதம். 14 பேரை திட்டம் போட்டுக் கொலை செய்வதை ஒரு தேசம் வேறெப்படியும் பார்க்காது


ராஜீவ் மீதான வெறுப்பு


தமிழகத்தில் மெத்தப் படித்தவர்களிடையேயும் ஓரளவேனும் ராஜீவ் மீதும் காங்கிரஸ் மீதும், இந்திய-இலங்கை ஒப்பந்தமும் அதன் பின் விளைவுகளையும் வைத்து, ஒவ்வாமை உண்டு. ராஜீவ் கொலை பற்றி பேச்செடுத்தாலேகொலை செய்தது தவறு ஆனால்என்று ஆரம்பித்து அந்த ஆனாலுக்குப் பிறகு அந்த கொலை ஏன் தவறல்ல என்றோ அல்லது பிரபாகரனின் நிலையில் இருந்து பார்த்தால் புரிந்துக் கொள்ளக் கூடிய செயல் என்றோ வாதிடுவார்கள்.


ராஜீவ் கொலை பற்றிய எந்த உரையாடலும் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைத் தொட்டுப் பேசாமல் தமிழகத்தில் நகராது. இதில் பலர் செய்யும் தவறுகள் சில. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை செயல்பட விடாமல் ஒட்டு மொத்தமாக கிழித்துப் போடும் சூழலை உருவாக்கி அந்த தீர்மானத்தை காலாவதியாக்கி போரை துவக்கியவர் பிரபாகரன். போரில் இரண்டு தரப்பும் போரியல் தர்மங்களை மீறினர் என்பதே உண்மை. அமைதிப்படையினரால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர் என்போர் சௌகரியமாக பிரபாகரனால் அப்போதும் அதற்கு முன்னரும் பின்னரும் பாதிக்கப்பட்ட அநேகரும் தமிழர்களே என்பதை மறந்து விடுகிறார்கள்


இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா ஏன் கையெழுத்திட்டதென்கிறார்கள். ஏன் இந்தியாவுக்கு அந்த உரிமையில்லையா? போராளிகளுக்கான உதவிகள், தளவாடங்கள், லட்சகணக்கான அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கெல்லாம் பாத்தியதை உடைய நாட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை மட்டும் கிடையாதா? பங்களாதேஷ் போரில் கையெழுத்திட்டதும் இந்தியா தான்


ராஜீவ் ஒன்றும் அமைதிப்படையை தமிழர்களுக்கு எதிராக செயல்படுங்கள் என்று சொல்லி அனுப்பவில்லை. தமிழர் நலன் காக்க தான் இந்தியா முனைந்தது. மேலும் உள்நாட்டில் காவல் துறையோ வெளிநாட்டில் ராணுவமோ அத்து மீறல்கள் செய்யும் போது அந்த அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க நிறைய வழிமுறைகள் உள்ளது. ஒரு மாநிலத்தில் காவல்துறை நடத்திய வெறியாட்டத்துக்கு அரசிடம் கேள்விக் கேட்பார்கள் தார்மீக பொறுப்பேற்க சொல்வார்கள். அது தான் வாடிக்கை. ஆனால் யாரும் முட்டாள்தனமாக மாநில முதல்வரை நேரடி பொறுப்பேற்கச் சொல்லமாட்டார்கள்.


ராஜீவை வெறுக்கிறார்களோ இல்லையோ பிரபாகரன் மீது, அவர் செய்த அத்தனை பயங்கரவாதங்களையும் தாண்டி, சிறிதாவது மையல் கொண்டவர்கள் தமிழகத்தில் அதிகம். பத்மநாபாவோடு 12 பேரை மாநில தலைநகரிலேயே பிரபாகரன் கொன்ற போது கூட தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீது எந்த பெரிய விமர்சனமும் எழவில்லை. அப்போது நடந்த இரங்கல் கூட்டத்தில் சிங்கமென கர்ஜித்தது ஜெயகாந்தனே. அப்போதே ஆரூடம் சொன்னார் விடுதலைப் புலிகளால் பேரழிவு நிகழுமென. விடுதலைப் புலிகளின் வன்முறை மோகத்தை காட்டமாக சாடி பாசிஸ்டுகள் என்றார். புலிகளின் அந்த கொலைக்காக தமிழர்கள் நாணுகிறார்கள் என்றார் (அப்படியான பெரும்பான்மை அப்போது இல்லை என்பதே உண்மை).


இன்னொரு பிரபலமான பல்லவி, “ராஜீவ் கொலைச் சதியில் மற்றவர்கள் அடையாளம் காணப்படவில்லை, இவர்களே அகப்பட்டுக் கொண்டார்கள்என்பது. ‘அருஞ்சொல்ஆசிரியர் சமஸும் இதனை வழி மொழிகிறார். ஒரு தேசத் தலைவர் கொலையில் காலாகாலத்துக்கும் சந்தேகங்கள் எழுந்துக் கொண்டே இருக்கும். கென்னடி கொலையில் சதி வலைகளை விவரித்து பல ஆண்டுகளுக்குப் பின் சினிமாவே வந்தது. வேறு யாரெல்லாம் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று விவாதிக்கலாம் ஆனால் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்திருக்கிறது அதனை மறக்கலாகாது


இந்திய நீதித்துறையின் செயல்பாடு:


யாகூப் மேமோன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இறந்த போது அவர் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கான இஸ்லாமியர் கலந்துக் கொண்டது பல்வேறு தரப்பிலும் கண்டனத்தை வரவழைத்தது. அப்போதும் இதோ பேரறிவாளன் விஷயத்திலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவான நிலையெடுக்க காரணம் நீதித் துறையும், விசாரணை அமைப்புகளும் பாரபட்சமானவை என்ற நம்பிக்கையே


சமஸ் பேரறிவாளனின் விடுதலை ஏன் கொண்டாடப்படுகிறது என்று விளக்கியக் கட்டுரையில் சொல்கிறார், “ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலை வழக்கைகூட நம்முடைய விசாரணை அமைப்புகள் எவ்வளவு மட்டியாகக் கையாண்டன; அவர்கள் கைக்குக் கிடைத்த ஆட்களை வைத்து அதற்கேற்ப கதை எழுதி வழக்கை எப்படி ஜோடித்து  முடித்திருக்கிறார்கள் என்பதைத் தன் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட அநீதியின் ஊடாகவே வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.” இது உண்மையா?


இந்திய நீதித்துறையின் மீது அநேக விமர்சனங்களை முன் வைக்கலாம். கீழ வெண்மணி வழக்கில் நீதிமன்றங்களின் செயல்பாட்டினை சந்துருவே விமர்சித்து எழுதியிருக்கிறார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிமன்றம் குற்றவாளிகள் உணர்ச்சி வேகத்தில் செய்தது என்று சமாதானம் சொன்னதெல்லாம் நடந்தது. பலர் அமர்ந்திருக்கும் பேருந்துக்கு தீ வைத்தால் என்ன ஆகும் என்று குழந்தைக்கும் தெரியும்


ஒரு தேசியத் தலைவரின் கொலை வழக்கில் விசாரணை அமைப்புகளும் நீதிமன்றங்களும் தவறிழைக்க அநேக வாய்ப்புகளுண்டு. முதல் தீர்ப்பில் வகை தொகையில்லாமல் 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியதில் ஆரம்பித்தது வினை. உச்ச நீதிமன்றம் அதில் பெரும்பாலோருக்கு தண்டனையைக் குறைத்த போது பலருக்கும் தண்டனை குறைக்கப்படாதவர்களின் தண்டனை மீதும் சந்தேகம் எழுந்தது


நால்வருக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்ற பெஞ்சின் நீதிபதி ஒருவர், கே.டி. தாமஸ், அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கக் கூடாதென்று சமீபத்தில் சொன்னதும் இப்போது சுட்டிக் காட்டப்படுகிறது. அந்த தீர்ப்பை அளித்த மற்ற நீதிபதிகள் அவர்கள் தீர்ப்பில் இருந்து பின் வாங்கவில்லை என்பது ஏனோ பேசப்படுவதில்லை


இந்த சறுக்கல்களைத் தாண்டி பார்த்தால் இந்திய நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க வழக்கில் சிறப்புறவே நடந்திருக்கிறது. 11 வருட கருணை மனு காத்திருப்பைக் காரணம் காட்டி மரண தண்டனையைக் குறைத்தது, ஆயுள் தண்டனையில் இருந்து அரசு அமைப்புகளின் இழுத்தடிப்பைக் கண்டித்து இப்போது விடுதலைச் செய்ததாகட்டு, இதெல்லாம் நினைத்தேப் பார்க்க முடியாது. ஒரு முன்னாள் பிரதமரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், ‘நேரடியாகஇல்லாவிடினும், நாளை நம் சமூகத்தில் சராசரி பிரஜைகளாக உலா வருவார்கள். வேறு எந்த நாட்டிலும் இது நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ராபர்ட் கென்னடியைக் கொன்றவர் இன்னமும் சிறையில் இருக்கிறார். இத்தனைக்கும் கொல்லப்பட்ட போது ராபர்ட் கென்னடி முன்னாள் ஜனாதிபதிக் கூடக் கிடையாது, சாதாரண செனட்டர் தான்


சிபிஐ மீதும் விசாரணை அமைப்புகள் மீதும் பல குற்றச்சாட்டுகள். ஆனால் நாம் மறப்பது குற்றத்தை நிரூபக்கவே முடியாதென்று நினைத்த முதல் சில நாட்களிலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வழக்கின் ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆணித்தரமாக கட்டமைத்தது. “ஒரு கடுமையான சட்டத்தின் கீழ்தான், பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்என்று சந்துரு எழுதும் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல தரவுகளையும் கடந்துப் போய் விடுகிறார். தடா சட்டத்தில் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டும் போது அதனோடு இயைந்த பல ஆதாரங்களையும் விசாரணை அமைப்புகள் முன் வைத்ததால் தான் மொத்தமாக வழக்கு தள்ளுபடியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


பெரும் பயங்கரவாத கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்பியதே தண்டனையை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றாதது தான் காரணம். நிர்பயா கொலைக்காரர்கள், யாகூப் மேமோன், அப்ஸல் குரு முதலானோரின் தண்டனைகள் சீக்கிரமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வழக்கில் பல தருணங்களில் குற்றவாளிகள் முக்கியமான வெற்றிகளை அடைந்திருப்பதே இவர்கள் விஷயத்திலாவது நீதிமன்றங்கள் அவ்வப்போதேனும் நியாயத்தைச் செய்திருக்கின்றன என காட்டுகிறது.


தடா சட்டம் விவாதிக்கப்பட்ட போதே அது மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் என்று எச்.எம்.சீர்வை போன்ற வல்லுநர்கள் கட்டுரைகள் எழுதி எதிர்த்தனர். வாசித்திருக்கிறேன். அப்போது தமிழகத்தில் இருந்து எந்த பெரிய விவாதமும் எழவில்லை. பொது கோர்ட்டில் விசாரிக்காமல் “in camera” விசாரணை, பெயில் கிடைக்காதது என்று பல ஷரத்துகளை அப்போதே பலர் எதிர்த்தனர்


இந்தியாவில் எப்போதும் ஏதோ ஒரு தீவிர அடக்குமுறை சட்டம் அமலில் இருந்திருக்கிறது. மிசா, தடா, பொடா என்று வரிசைப்படுத்தலாம். வைகோ பொடாவுக்கு ஆதரவாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இச்சட்டங்கள் பற்றி எப்போதும் தமிழகத்தில் பெரிய அறிவு விவாதங்கள் நடைபெற்றதில்லை. இப்போதும் தடா மீதான் விமர்சனங்கள் தமிழகம் அரசியல் ரீதியாக விரும்புகிறவர்கள் தண்டிக்கப்பட்டார்களே என்பதற்காகத் தான்


கடைசியாக இப்போது வந்திருக்கும் தீர்ப்பு மாநில அரசு, ஆளுநரின் உரிமைகள் பற்றியும், தண்டனை காலம் பற்றியும் இன்னும் பல வருடங்களுக்கு எதிரொலிக்கும். இதனை சரியாக நீதிபதி சந்துருவும், சமஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு தீர்ப்பைக் கொண்டாடுவது வேறு விடுவிக்கப்பட்ட குற்றவாளியைக் கொண்டாடுவது வேறு. கட்டுரையாளர்கள் இருவரும் அந்த வித்தியாசத்தை பார்க்க தவறியிருக்கிறார்கள்


காங்கிரஸின் எதிர்வினை நியாயமற்றதா?


நீதிபதி சந்துருவும், ஆசிரியர் சமஸும், பலரும் காங்கிரஸின் எதிர்வினைகளை எள்ளி நகையாடுவதுடன் காங்கிரஸ் தமிழகத்தில் செல்வாக்கிழந்ததே மாநில உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாத தேசிய கட்சியாக இருப்பதே என்று வாதிடுகிறார்கள். இதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பதோடு இந்த கண்டனங்கள் அநியாயமானவையும்


தமிழ் மக்களால் 1971-க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளதுஎன்று சந்துரு தன் கட்டுரையை காட்டமாக ஆரம்பிக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புரம்பான மிகைப்படுத்தல்.


1980  தேர்தலில் இந்திரா காங்கிரஸோடு கைக்கோர்த்த மு.கருணாநிதி, “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருகஎன்ற கோஷத்தோடு திமுகவை விட காங்கிரசுக்கு அதிக சீட்டுகளை ஒதுக்கி தேர்தலை சந்தித்தார். அப்போது குமரி அனந்தன் தலைமையில் இன்னொரு காங்கிரஸ் தரப்பு அதிமுக அணியில். இரண்டு அணிகளும் சேர்ந்து 37 இடங்களில் ஜெயித்தனர். திமுக ஜெயித்த இடங்கல் 31. 2000-ங்கள் வரையில் முக்கியமாக தொன்னூறுகள் வரை காங்கிரஸ் வலுவான வாக்கு வங்கியோடு தான் இருந்தது


சந்துரு 1971-இல் காங்கிரஸ் காலாவதியானது என்று காழ்ப்புடன் எழுதியதற்கு காரணம் அவர்களின் இன்றைய பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான செயல்பாட்டை கிண்டலடித்து ஒதுக்க நினைக்கும் நோக்கமே


தமிழக காங்கிரஸார் தங்கள் எதிர்ப்பின் மூலம் சோனியா குடும்பத்தினர் நளினியை மன்னித்ததையும், பேரறிவாளனின் விடுதலைக் குறித்து ஏதும் எதிர் கருத்துகள் சொல்லாததையும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெறாமல் செய்துவிடும் என்று சமஸ் கண்டிக்கிறார்.


கொல்லப்பட்டவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் பிரதமர். அவர் மீண்டும் பிரதமராகிவிடுவாரோ என்று